2016-03-29 15:46:00

சூதாட்ட அரங்குகள் குறித்து பிலிப்பீன்ஸ் ஆயர்கள் கவலை


மார்ச்,29,2016. பிலிப்பீன்ஸ் நாட்டில் தற்போது வேகமாக வளர்ந்து வரும் சூதாட்ட அரங்குகள் குறித்து தங்கள் வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளனர், அந்நாட்டு ஆயர்கள்.

சட்டத்திற்கு புறம்பாக பணத்தை புழக்கத்தில் விட இத்தகைய சூதாட்ட அரங்குகள் உதவுவதன் மூலம், பொருளாதார அமைப்புமுறையே பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது எனக் கூறும் தலத்திருஅவை அதிகாரிகள், மக்களின் பொழுதுபோக்கு என்பது தற்போது சூதாட்டமாக மாறிவிட்டது எனவும் தெரிவித்துள்ளனர்.

பங்களாதேஷில் இருந்து திருடப்பட்ட 8 கோடியே 10 இலட்சம் டாலர்கள், பிலிப்பீன்சின் ஒரு வங்கி வழியாக, ஒரு பணமாற்றும் நிறுவனத்திற்கும் பின்னர் சூதாட்ட அரங்கிற்கும் பரிமாற்றம் செய்யப்பட்ட குற்றச்சாட்டு தற்போது எழுந்துள்ள நிலையில், இது குறித்து தங்கள் கருத்துக்களை வெளியிட்ட ஆயர்கள், இது தனி ஒரு நபரால் ஆற்றப்பட்டதல்ல, மாறாக, இதற்குப் பின்னால் ஒரு குற்றக் கும்பலே செயல்பட்டிருக்கலாம் என்ற தங்கள் சந்தேகத்தையும் வெளியிட்டுள்ளனர்.

சூதாட்ட அரங்குகளுக்கு கொணரப்படும் பணம், பின்னர் அங்கு சூதாட்டத்தில் வென்ற பணமாக, அதாவது சட்ட அனுமதியுடன் சம்பாதிக்கப்பட்ட பணமாகக் காட்டப்படும் முயற்சிகள் இடம்பெறுகின்றன என கூறினார், பிலிப்பீன்ஸ் ஆயர் பேரவை தலைவர், பேராயர் Socrates Villegas. 

ஆதாரம் : UCAN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.