2016-03-29 15:20:00

ஏமனில் கடத்தப்பட்ட அருள்பணியாளர், உயிருடன் உள்ளதாக நம்பிக்கை


மார்ச்,29,2016. ஏமனில் கடத்தப்பட்ட இந்திய சலேசிய சபை அருள்பணியாளர் கொல்லப்பட்டு விட்டார் என்ற ஆதாரமற்ற தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்ற போதிலும், அவர் உயிருடனேயே இருக்கின்றார் என உறுதியாக நம்புவதாக, ஏமன் ஆயரும், சலேசிய துறவு சபை அதிகாரிகளும் அறிவித்துள்ளனர்.

ஏமனில் கடத்தப்பட்டுள்ள இந்திய அருள்பணியாளர், Tom Uzhunnalil அவர்கள், புனித வெள்ளியன்று சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்டார் என சில தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இவை ஆதாரமற்ற வதந்திகள் எனவும், அருள்பணி Tom அவர்கள் உயிருடனேயே இருக்கிறார் என தாங்கள் உறுதியாக நம்புவதாகவும் சலேசிய சபை அதிகாரிகளும், ஏமனின் அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் Paul Hinder அவர்களும் அறிவித்துள்ளனர்.

ஏமனின் ஏடன் நகரில் அமைந்துள்ள அன்னை தெரேசா சபை அருள் கன்னியர்கள் இல்லத்தில், இம்மாதம் 4ம் தேதி, நான்கு அருள் சகோதரிகளைக் கொன்றபின், அங்கிருந்த அருள்பணியாளர் Tom அவர்களைக் கடத்திச் சென்ற இஸ்லாமியத் தீவிரவாதிகள், அவரை புனித வெள்ளியன்று சிலுவையிலறைந்து கொல்வார்கள் என ஆதாரமற்ற வதந்திகள்  ஏற்கனவே பரப்பப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. 

ஆதாரம் : CWN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.