2016-03-29 13:27:00

இது இரக்கத்தின் காலம் : சிறைக்குள் புகுந்த இறை இரக்கம்


"இறைவன், தன் இரக்கத்தால் என் வாழ்வை எவ்விதம் மாற்றினார் என்பதற்குச் சாட்சியம் சொல்லவே நான் இங்கு வந்துள்ளேன்" என்று, ஒரு சிறைக்கைதி, வத்திக்கானில் நடைபெற்ற ஒரு விழாவில் கூறினார். சீனாவில் பிறந்து, இத்தாலியில் குடியேறி, தற்போது, பதுவை நகரில், பத்தாண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் ஜாங் அகோஸ்தீனோ ஜியான்கிங் (Zhang Agostino Jianqing) என்ற 30 வயது இளையவர், இறைவன் எவ்விதம் தன்னை சிறையில் சந்தித்தார் என்ற அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.

இளையவர் ஜியான்கிங் அவர்கள், 12 வயது சிறுவனாய் இருந்தபோது, தன் பெற்றோருடன் இத்தாலிக்கு வந்து சேர்ந்தார். 16 வயதில் அவரது வாழ்வு தடம்புரண்டது. 19வது வயதில், அவர் ஒரு பெரும் குற்றத்தில் பிடிபட்டு, 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டார். சிறையில் அவருக்கு ஆறுதலாக இருந்த ஒரு சிலர் வழியே, கிறிஸ்து அவருக்கு அறிமுகமானார். 2014ம் ஆண்டு, அவர் திருமுழுக்கு பெற்றபோது, அகஸ்டின் என்ற பெயரைத் தேர்ந்தெடுத்தார். தாயான புனித மோனிகாவின் கண்ணீராலும், செபங்களாலும் மனம் மாறிய புனித அகஸ்டினைப் போல, தானும், தன் அன்னையின் கண்ணீராலும், கிறிஸ்துவின் அறிமுகத்தாலும், மனம் மாறியதாகக் கூறினார், இளையவர் ஜியான்கிங். கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக, இறைவனின் இரக்கம், சிறையில் தன்னை பாதுகாத்து வந்துள்ளது என்பதை, இளையவர் ஜியான்கிங் அவர்கள், வத்திக்கான் விழாவில் வலியுறுத்திக் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.