2016-03-28 14:41:00

பாகிஸ்தான் குண்டுவெடிப்பு தாக்குதல் மிகுந்த வேதனையளிக்கிறது


மார்ச்,28,2016. லாகூர் நகரில் நடந்துள்ள மிகக் கொடூரமான குண்டுவெடிப்புத் தாக்குதல் குறித்து அறிக்கை வெளியிட்ட திருப்பீடச் செய்தித் தொடர்பாளர் இயேசு சபை அருள்பணி பெதரிக்கோ லொம்பார்தி அவர்கள், இதில் பல அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருப்பது மிகுந்த வேதனையையும் கவலையையும் கொடுத்துள்ளது என்று கூறியுள்ளார்.

இது, மிகவும் பாதுகாப்பற்ற மக்கள் மீது நடத்தப்பட்டுள்ள கோழைத்தனமும், வெறுப்பும் நிறைந்த கொலைச் செயல் என்றும் அவர் கூறியுள்ளார்.

திருத்தந்தையுடன் இணைந்து, இதில் பலியானவர்கள், காயமடைந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்காகச் செபிப்பதாகவும், தீவிரவாத வன்முறையால் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தானின் சிறுபான்மை கிறிஸ்தவ சமூகத்துடன் ஒன்றித்திருப்பதாகவும் கூறியுள்ளார் அருள்பணி லொம்பார்தி.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழாவன்று கூறியுள்ளது போன்று, வெறுப்பின் கொடூர வெளிப்பாடுகள் தொடரும் இவ்வேளையில், துன்புறும் மக்களோடு பரிவும் தோழமையும் கொள்ளவும், உரையாடல், நீதி, ஒப்புரவு மற்றும் அமைதிப் பாதையில் நாட்டைக் கட்டியெழுப்பவும், சிலுவையில் அறையுண்டு உயிர்த்த கிறிஸ்து நமக்குத் தொடர்ந்து துணிச்சலையும் நம்பிக்கையையும் தருகிறார் என்றும் கூறியுள்ளார் அருள்பணி லொம்பார்தி.

லாகூர் நகர்ப் பூங்காவில் இஞ்ஞாயிறு மாலையில் பல கிறிஸ்தவக் குடும்பங்கள் உயிர்ப்பு ஞாயிறு நிகழ்வுகளை கொண்டாடிக் கொண்டிருந்தவேளை இடம்பெற்ற தற்கொலைக் குண்டுவெடிப்புத் தாக்குதலில் 29 சிறார் உட்பட எழுபதுக்கும் மேற்பட்டோர்  பலியாகியுள்ளனர். மேலும் 350 பேர் படுகாயமடைந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் கிறிஸ்தவக் குடும்பங்களைச் சார்ந்தவர்கள். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.