2016-03-28 15:15:00

கர்தினால் போ:கிறிஸ்துவின் உயிர்ப்பு மியான்மார்க்கு நம்பிக்கை


மார்ச்,28,2016. நீண்ட பாலைநிலத்தில் ஆறு ஒன்று பெருக்கெடுத்து ஓடுவது போன்று கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழா மியான்மார் நாட்டிற்கு அமைந்துள்ளது என்று, யாங்கூன் பேராயர் கர்தினால் சார்லஸ் மாங் போ அவர்கள் கூறியுள்ளார். 

அண்மையில் வரலாற்று சிறப்புமிக்க அரசியல் மாற்றங்கள் இடம்பெற்றுள்ள மியான்மார் மக்களுக்கு இந்தக் கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழா மிகவும் சிறப்பானது என்று, இப்பெருவிழாச் செய்தியில் கூறியுள்ளார் கர்தினால் போ.

நம்பிக்கையின்மையின் நீண்டகால பாலைநிலத்தில் சனநாயக ஆறு மெதுவாக தனது அழகைப் பரப்பி வருகிறது என்று குறிப்பிட்டுள்ள கர்தினால் போ அவர்கள், மியான்மார் மக்களாகிய நாம், நம்மைச் சுற்றிலும் காணப்படும் உயிர்ப்பின் அடையாளங்களோடு இப்பெருவிழாவைக் கொண்டாடுகிறோம் என்று தெரிவித்தார்.

இது நம்பிக்கையின் காலம் என்றும், மனித இதயங்களிலும், மனித வரலாற்றிலும் உயிர்ப்பு, நம்பிக்கையாகத் தொடர்ந்து இடம்பெறுகின்றது என்பதை வரலாறு நிரூபிக்கின்றது என்றும், தனது செய்தியில் கூறியுள்ளார் யாங்கூன் கர்தினால் சார்லஸ் போ.

15 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறையிலிருந்த ஆங் சான் சூச்சி அவர்கள், துன்பத்தின் மரத்திலிருந்து உயிர்த்தெழுந்துள்ளார், மியான்மாரை ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக இருள் கவ்வியிருந்தது என்றும், துன்பங்களின் மத்தியில் சூச்சி அவர்களின் துன்பமும், மனத்துணிவும் விடுதலையின் உயிர்ப்பைக் கொணர்ந்துள்ளது என்றும் கூறியுள்ளார் கர்தினால் போ.

மியான்மாரின் புதிய அரசில், சூச்சி அவர்கள், வெளியுறவு அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.