2016-03-28 14:27:00

இது இரக்கத்தின் காலம்– கருணை, தகுதியைப் பார்ப்பதில்லை


ஒருசமயம், ப்ரெஞ்ச் பேரரசர் நெப்போலியன் அவர்களிடம் பிடிபட்ட இளைஞர் ஒருவர் தப்பியோட முயற்சித்தார். அந்நாள்களில் தப்பியோடுவது மரணதண்டனைக்குரிய குற்றம். எனவே இக்குற்றம் தொடர்பாக இராணுவ விசாரணை நடந்த நாளில் அந்த இளைஞரின் தாய் அங்கு வந்தார். பேரரசர் நெப்போலியனிடம், அரசே, இவன் எனது ஒரே மகன். திருமணம் ஆகாதவன். ஆகவே என் குலம் அழியாமலிருக்க, இவனுக்கு உயிர்ப்பிச்சை தர வேண்டும் என்று கண்ணீரோடு கெஞ்சினார். அதற்கு பேரரசர் நெப்போலியன், இவன் செய்தது கடுமையான குற்றம் என்றார். அப்போது அந்தத் தாய், என் மகன் நிரபராதி என்று சொல்லவில்லையே, கொஞ்சம் கருணை காட்டும்படித்தானே நான் தங்களிடம் வேண்டுகிறேன் என்றார். மீண்டும் பேரரசர் நெப்போலியன், உன் மகன் கருணை காட்டவும் தகுதியற்றவன் என்றார். பேரரசே, கருணை என்பது தகுதியைப் பார்த்து செய்யப்படுவது அல்லவே என்றார் அத்தாய். இந்தக் கூற்று, பேரரசர் நெப்போலியன் அவர்களின் மனதை மாற்றியது. ஆதலால் அந்த இளைஞரை மன்னித்து விடுதலை செய்தார். இரக்கமற்ற வீரர்களாகச் செயல்பட்ட தைமூர், செங்கிஸ்கான், அட்டிலா போன்றவர்கள், வரலாற்றில் அழியாப் பழியுடன் அவப்பெயருடன் விளங்குகிறார்கள். தைமூர் பேரரசு இன்று இல்லை. செங்கிஸ்கானின் அரசு, இருந்த சுவடுகூட இப்போது இல்லை. ஆனால் பேரரசர் நெப்போலியன் அவர்களின் பிரான்ஸ் இன்றும் வலிமையுள்ள ஒரு நாடாகவேத் திகழ்கின்றது. ஆம். தன்னில் இரக்கம் உடையதே வீரம். இரக்கம், என்றென்றும் இறைவனின் ஆயுதம். நிலைத்த வெற்றியைத் தருவதும் இரக்கம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.