2016-03-27 14:29:00

பாஸ்கா திருவிழிப்புத் திருவழிபாடு


மார்ச்,27,2016. கிறிஸ்தவ உலகம் கொண்டாடுகின்ற திருவிழாக்களிலெல்லாம் முதன்மையான, தலைசிறந்த விழா கிறிஸ்து உயிர்ப்புப் பெருவிழா.  ஏனெனில் அது கிறிஸ்தவ விசுவாசத்தின் திருவிழா. கிறிஸ்தவ வாழ்வுக்கு அடித்தளமாக இருந்து, அர்த்தம் தருவதும் கிறிஸ்துவின் உயிர்ப்புதான். சாவின் சக்திகள் இறைவன்முன் பலமற்றவை என்ற செய்தியைப் பறைசாற்றிக் கொண்டேயிருக்கிறது கிறிஸ்துவின் உயிர்ப்பு. இச்சனிக்கிழமை இரவு 8.30 மணிக்கு, வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் பாஸ்கா திருவிழிப்புத் திருவழிபாட்டைத் தலைமையேற்று நடத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ். கர்தினால்கள், ஆயர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான அருள்பணியாளர்கள், திருத்தந்தையுடன் சேர்ந்து கொண்டாடிய இத்திருப்பலியில், பல்லாயிரக்கணக்கான பல நாடுகளின் விசுவாசிகளும் பக்தியுடன் பங்கு பெற்றனர். பசிலிக்கா நிரம்பி வழிந்ததால், வளாகத்திலும் பெருமளவில் விசுவாசிகள் கூடிநின்று பெரிய திரைகளில் இத்திருவழிபாட்டில் கலந்து கொண்டனர். இத்திருவழிபாட்டில், இத்தாலிக்கான கொரியத் தூதுவர் Yong Joon Lee, அவரின் மனைவி Hee Kim ஆகியோர் உட்பட, இந்தியா, சீனா, கொரியா, இத்தாலி, அல்பேனியா, காமரூன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 12 பேர் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடம் திருமுழுக்கு, உறுதிபூசுதல் அருளடையாளங்களைப் பெற்றனர். மூன்று மணி நேரம் நடைபெற்ற இத்திருவழிபாட்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிறிய, ஆனால், கருத்தாழமிக்க, நம்பிக்கையூட்டும் மறையுரையும் ஆற்றினார். வாழ்வின் இன்னல்களுக்கு மத்தியில் கவலையால் ஆட்கொள்ளப்படாமல், உயிர்த்த கிறிஸ்துவின்மீது நம்பிக்கையோடு இருக்குமாறு கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.