2016-03-24 15:24:00

மக்களின் மதிப்பில் முதலிடம் பெற்றுள்ள திருத்தந்தை பிரான்சிஸ்


மார்ச்,24,2016. உலகின் அனைத்து அரசியல் தலைவர்களைவிட, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மக்களிடையே அதிக நன்மதிப்பை பெற்றுள்ளார் என்று, இவ்வியாழனன்று வெளியான ஒரு கருத்துக்கணிப்பு கூறியுள்ளது.

WIN/Gallup International என்ற ஒரு கருத்துக்கணிப்பு நிறுவனம், 64 நாடுகளில், 1000க்கும் அதிகமான மக்களிடையே மேற்கொண்ட ஒரு கருத்துக்கணிப்பில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மதம் என்ற எல்லையைத் தாண்டி, அனைத்து மதத்தினரிடையிலும், மத நம்பிக்கையற்றவர் நடுவிலும் நன்மதிப்பு பெற்றுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் மதம் என்ற எல்லையைக்  கடந்து, பெரும்பான்மையான உலக மக்களிடையே நேர்மறையான தாக்கங்களை உருவாக்கியுள்ளார் என்பதை அறிய முடிகிறது என்று, WIN/Gallup International கருத்துக்கணிப்பு நிறுவனத்தின் தலைவர், Jean-Marc Leger அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

கத்தோலிக்க மக்கள் மத்தியில், 85 விழுக்காட்டினர், திருத்தந்தை மீது உயர்ந்த மதிப்பு வைத்துள்ளனர் என்றும், அதற்கு அடுத்தபடியாக, யூதர்கள் மத்தியில், 65 விழுக்காட்டினர் அவர் மீது உயர்ந்த மதிப்பு கொண்டுள்ளனர் என்றும் இக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

கருத்துக்கணிப்பு நடத்தப்பட்ட 64 நாடுகளில், பிலிப்பைன்ஸ் நாட்டில், 93 விழுக்காட்டினர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை தாங்கள் மிகவும் மதிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

இதுவரை WIN/Gallup International நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்புகளில் உயர்ந்த நிலைகளை வகித்துவந்த அமெரிக்க அரசுத் தலைவர் ஒபாமா, ஜெர்மன் அரசுத் தலைவர் ஆஞ்செலா மெர்க்கெல் போன்ற அனைத்துத் தலைவர்களையும் விட, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மக்கள் கொண்டுள்ள மதிப்பில் முதலிடம் பெறுகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் :  BBC / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.