2016-03-23 16:26:00

பிலிப்பைன்ஸ் - தங்களையே சிலுவையில் அறைதலைக் கைவிட அழைப்பு


மார்ச்,23,2016. பிலிப்பைன்ஸ் கத்தோலிக்கரில் பலர், புனித வாரத்தில் தங்களைச் சிலுவையில் அறைதல், கசையால் அடித்தல் போன்ற கடுமையான தப முயற்சிகளைச் செய்துகொள்ளும் பழக்கத்தைக் கொண்டிருக்கும்வேளை, தங்களை வேதனைப்படுத்தும் இப்பழக்கத்தைக் கைவிட்டு ஏழைகளுக்கு உதவுமாறு கேட்டுள்ளனர், அந்நாட்டு ஆயர்கள்.

புனித வாரத்தை உண்மையிலேயே நல்ல விதமாகச் செலவிட விரும்பினால், பிறரை அதிகமதிகமாக அன்புகூருங்கள், மற்றும் ஏழைகளுக்குக் கொடுத்து உதவுங்கள் என்று, பிலிப்பைன்ஸ் ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் Socrates Villegas அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஏழைகளுக்குக் கொடுத்து உதவும் திருப்பயணம், நாம் வாழும் இக்காலத்தில் புனித வாழ்விற்கு மெருகூட்டும் என்று குருத்தோலை ஞாயிறன்று கூறிய பேராயர் Villegas அவர்கள், தங்களையே துன்புறுத்துவதும், பக்திமுயற்சியை விளம்பரப்படுத்துவதும், பகல்கனவு காணும் தியானங்களும் புனித வாரத்தைப் புனிதமாக்காது என்று கூறினார்.

மேலும், பரிவன்பு எங்கே இருக்கின்றது? இரக்கம் எங்கே இருக்கின்றது? என்ற கேள்விகளை விசுவாசிகளிடம் குருத்தோலை ஞாயிறன்று முன்வைத்தார் மனிலா கர்தினால் லூயிஸ் தாக்லே.

ஆதாரம் : UCAN/ வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.