2016-03-23 16:24:00

பிரசல்ஸ் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு WCC கண்டனம்


மார்ச்,23,2016. பெல்ஜிய நாட்டுத் தலைநகர் பிரசல்ஸில் இடம்பெற்றுள்ள நச்சுவாயு கலந்த தொடர் பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்து தனது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார் WCC என்ற உலக கிறிஸ்தவ சபைகள் மன்றப் பொதுச் செயலர் Olav Fykse Tveit.

பெல்ஜிய அரசர் Philippe அவர்களுக்கு அனுப்பிய இரங்கல் செய்தியில் இக்குண்டுவெடிப்புத் தாக்குதல்கள், கொடூரமானவை மற்றும் அறிவற்ற செயல் என்று குறிப்பிட்டுள்ள Tveit அவர்கள், இதில் பலியானவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தனது செபங்களையும் தெரிவித்துள்ளார்.

பிரசல்ஸில் Zaventem பன்னாட்டு விமான நிலையத்திலும், ஐரோப்பிய ஒன்றியக் கட்டடம் மற்றும் கிறிஸ்தவ ஒன்றிப்பு மையத்திற்கு அருகிலுள்ள பாதாள இரயில் நிலைத்தில் இச்செவ்வாயன்று இடம்பெற்ற இத்தாக்குதல்களில் முப்பதுக்கு மேற்பட்டோர் இறந்துள்ளனர் மற்றும் 170க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

மத்திய கிழக்கின் பல்வேறு பகுதிகளில் இடம்பெறும் துன்பங்களிலிருந்து தப்பித்து வரும் மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்க முயற்சிக்கும்  ஐரோப்பாவுக்கும், ஐரோப்பியர்களுக்கும் இத்தாக்குதல்கள் கடினமான சூழலை உருவாக்குகின்றன என்றும்   கூறியுள்ளார் Tveit.

WCC மன்றத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் அனைவரும் இத்தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுடன் ஒருமைப்பாட்டுணர்வு காட்டி அவர்களுக்காகச் செபிக்குமாறு வலியுறுத்தியுள்ளார் Tveit.

மேலும், கான்ஸ்டான்டிநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு சபைத் தலைவர் முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயோ அவர்களும் தனது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

பிரசல்ஸ் விமான நிலையத்தில் இச்செவ்வாயன்று தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்திய இரண்டு பேரும் சகோதரர்கள் என பெல்ஜியத்தின் அரச ஊடகம் தெரிவித்துள்ளது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.