2016-03-23 15:58:00

உலக இளையோரின் கரங்களில் இரக்கத்தின் சுடரொளி


மார்ச்,23,2016. போலந்து நாட்டின் கிராக்கோவ் நகரில் நடைபெறும் உலக இளையோர் தினம், இத்தினத்தை உருவாக்கிய திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், புனிதர் பட்டம் பெற்றபின் நடக்கும் முதல் உலக இளையோர் தினம் என்றும், இப்புனிதர் பிறந்த கிராக்கோவ் உயர் மறைமாவட்டத்தில் முதன்முறை நிகழும் இளையோர் தினம் என்றும், போலந்து கர்தினால் Stanislaw Dziwisz அவர்கள் கூறினார்.

வருகிற ஜூலை 26ம் தேதி முதல் 31ம் தேதி வரை போலந்து நாட்டின் கிராக்கோவ் நகரில் நடைபெறவிருக்கும் உலக இளையோர் தினம் பற்றி, செனிட் மற்றும் நான்கு இத்தாலிய பத்திரிகையாளர்க்குப் பேட்டியளித்த கிராக்கோவ் பேராயர் கர்தினால் Dziwisz அவர்கள், இந்த இரக்கத்தின் ஆண்டில், உலக இளையோர் தினம் மிக முக்கிய நிகழ்வாக அமையும் என்று கூறினார்.

இந்த உலக நிகழ்வில் கலந்துகொள்ள வருகின்ற 174 நாடுகளின் இளையோர் பிரதிநிதிகளை ஏற்பதற்கு கிராக்கோவ் நகரம் தயாராகிக் கொண்டு வருகிறது என்றும், இந்நிகழ்வில் இந்த இளையோர் பெறும் இரக்கத்தின் சுடரொளியை, அமைதி தேவைப்படும் இன்றைய உலகுக்கு எடுத்துச் செல்ல, அவர்கள் அழைக்கப்படுவார்கள் என்றும் கூறினார் கர்தினால் Dziwisz.

இரக்கமே நிறைந்த இயேசுவின் பக்கம் பார்வையைச் செலுத்தாமல் அமைதியை அடைய முடியாது என்று அருள்சகோதரி, புனித ஃபவுஸ்தீனா கொவால்ஸ்கா (Faustina Kowalska) அவர்கள் கூறியிருப்பதையும் நினைவுகூர்ந்த கர்தினால் Dziwisz அவர்கள், 1930களில் கிராக்கோவ் மறைமாவட்டத்தில் இரக்கத்தின் இயேசு இப்புனிதருக்குத் தம்மை வெளிப்படுத்தினார் என்றும் கூறினார்.

குடிபெயர்ந்தவர் பற்றிய கேள்விக்குப் பதிலளித்த கர்தினால் Dziwisz அவர்கள், போலந்து இம்மக்களை வரவேற்கும், ஏனெனில் போலந்து மக்களும் குடிபெயர்ந்தவர்களே என்றும் கூறினார்.

வருகிற ஜூலை 26ம் தேதி முதல் 31ம் தேதி வரை கிராக்கோவ் நகரில் நடைபெறவிருக்கும் உலக இளையோர் தினத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கலந்து கொள்வார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : Zenit / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.