2016-03-23 16:30:00

அமெரிக்க இராணுவத் தளங்களுக்கு பிலிப்பைன்ஸ் ஆயர்கள் எதிர்ப்பு


மார்ச்,23,2016. பிலிப்பைன்ஸ் நாட்டின் ஐந்து மாநிலங்களில், வருகிற மாதங்களில் அமெரிக்க ஐக்கிய நாட்டு இராணுவப் பயன்பாட்டுத் தளங்களை அமைப்பதற்கு எடுக்கப்பட்டு வரும் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர், பிலிப்பைன்ஸ் ஆயர்கள்.

இத்திட்டம் பற்றிக் கருத்து தெரிவித்த Nueva Ecija மாநிலத்தின் San Jose ஆயர் Roberto Mallari அவர்கள், பிலிப்பைன்ஸில் அமெரிக்க ஐக்கிய நாட்டு இராணுவப் பயன்பாட்டுத் தளங்களை அமைப்பது, பிரச்சனைகளுக்குத் தீர்வுகளைக் கொணர்வதைவிட மேலும் பிரச்சனைகளையே உருவாக்கும் என்று கூறினார்.

San Jose மறைமாவட்டத்தில் பாதுகாப்பை ஊக்குவிக்கும் நோக்கத்தில், பிலிப்பைன்ஸ்க்கும் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கும் இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தம், நியாயமற்ற கட்டுப்பாட்டு விதிகளைக் கொண்டிருக்கின்றது என்றும், இது நாட்டில் அமெரிக்காவின் இராணுவ இருப்பை அதிகரிக்கும் என்றும் எச்சரித்தார் ஆயர் Mallari.

மேலும், இவ்விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த Palawan ஆயர் Pedro Arigo அவர்கள், இந்த ஒப்பந்தம், சீனக் கடற்படைக்கும், பிலிப்பைன்ஸ் மீனவர்களுக்கும் இடையே நிலவும் பதட்டநிலைகளை அதிகரிக்கும் என்று கூறினார்.

பாதுகாப்பை ஊக்குவிக்கும் நோக்கத்தில், பிலிப்பைன்ஸ்க்கும் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கும் இடையே 2014ம் ஆண்டில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. 

ஆதாரம் : UCAN/ வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.