2016-03-22 15:54:00

பிரசல்ஸ் தாக்குதல்கள், திருத்தந்தை கடும் கண்டனம்


மார்ச்,22,2016. பெல்ஜிய நாட்டுத் தலைநகர் பிரசல்ஸில், அதிகத் துன்பங்களை வருவிக்கும் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதற்குத் தனது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பிரசல்ஸில் Zaventem விமான நிலையத்திலும், பாதாள இரயில் நிலையங்களிலும் இத்திங்களன்று இடம்பெற்றுள்ள குண்டுவெடிப்புத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் பெல்ஜிய நாட்டு மக்களுக்குத் தனது செபங்களையும்  ஒருமைப்பாட்டுணர்வையும் தெரிவித்துள்ள திருத்தந்தை, அமைதிக்காக இறைவனிடம் செபிப்பதாகக் கூறியுள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இச்செய்திகள் கொண்ட தந்திச் செய்தியை திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், திருத்தந்தையின் பெயரில், பிரசல்லஸ் பேராயர் Jozef De Kesel அவர்களுக்கு அனுப்பியுள்ளார்.

மேலும், மரணத்தை வருவிக்கும் இப்பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதற்குத் தங்களின் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளனர் பெல்ஜிய ஆயர்கள். இதில் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தங்களின் செபத்துடன்கூடிய ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்துள்ள ஆயர்கள், இத்தாக்குதல்களுக்குத் தீர்வு காண்பதற்கு, தேசிய அளவில் ஒற்றுமையுடன் செயல்படுமாறு கூறியுள்ளனர்.

Zaventem விமான நிலையக் குண்டுவெடிப்புத் தாக்குதல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாகவும், ஆயிரக்கணக்கான பயணிகள் மற்றும் அவர்களின் குடும்பங்களை ஆழ்ந்த கவலையில் ஆழ்த்தியிருப்பதாகவும் பெல்ஜிய ஆயர்களின் கண்டன அறிக்கை கூறுகிறது.

இந்தப் பயங்கர குண்டுவெடி தாக்குதல்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளதாகவும், விமான நிலையத்தில் 81 பேரும், இரயில் நிலையத்தில் 55 பேரும் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  

பாரீஸ் தாக்குதலில் தொடர்புடைய முக்கிய தீவிரவாதி, கடந்த வெள்ளிக்கிழமையன்று பிரஸ்சல்ஸ் நகரில் கைது செய்யப்பட்டதற்குப் பதிலடியாக, இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.