2016-03-21 16:38:00

வத்திக்கானில் கடைபிடிக்கப்பட்ட 'பூமி நேரம்' 2016


மார்ச்,21,206. இவ்வாண்டு நாம் சிறப்பிக்கும் 'பூமி நேரம்' (Earth Hour) ஒரு முக்கியமான வரலாற்றுத் தருணத்தில் நம்மை வந்தடைந்துள்ளது; டிசம்பர் மாதம், பாரிஸ் மாநகரில், உலகச் சுற்றுச்சூழல் மாநாட்டில், நாடுகள் நிறைவேற்றியத் தீர்மானங்களை நடைமுறைப்படுத்த, 'பூமி நேரம்' ஓர் அழைப்பாக உள்ளது என்று ஐ.நா. பொதுச்செயலர், பான் கி மூன் அவர்கள் கூறினார்.

மார்ச் 19, இச்சனிக்கிழமையன்று, இரவு 8.30 மணிக்குக் கடைபிடிக்கப்பட்ட 'பூமி நேரம்' முயற்சியையோட்டி, பான் கி மூன் அவர்கள் இச்செய்தியை வெளியிட்டுள்ளார்.

உலக காடுவாழ் உயிரினங்களின் நிதி (World Wildlife Fund - WWF) என்ற அமைப்பினரால் 2007ம் ஆண்டு உருவாக்கப்பட்ட 'பூமி நேரம்' முயற்சி, இவ்வாண்டு, 178 நாடுகளில் கடைபிடிக்கப்பட்டது.

நாம் பயன்படுத்தும் மின்சக்தியைக் கட்டுப்படுத்தவேண்டும் என்பதை நினைவுறுத்த, மார்ச் 19 இரவு 8.30 மணியிலிருந்து, ஒரு மணி நேரத்திற்கு நாம் பயன்படுத்தும் அனைத்து மின் கருவிகளையும் நிறுத்தி வைப்பது, இம்முயற்சியின் ஒரு முக்கிய அம்சம்.

இவ்வழைப்பை ஏற்று, வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா, வளாகம், மற்றும் வத்திக்கான் இல்லங்களில் உள்ள மின்விளக்குகள் அனைத்தும் சனிக்கிழமை இரவு ஒரு மணி நேரம் அணைத்து வைக்கப்பட்டன என்பது குறிப்பிடத் தக்கது.

நியூ யார்க் நகரிலும், இன்னும் உலகின் பல நாடுகளிலும் உள்ள ஐ.நா.அவை கட்டடங்களிலும், உரோம் நகரின் கொலோசியம், சிட்னி நகரில் அமைந்துள்ள 'ஓபெரா இல்லம்' பாரிஸ் Eiffel கோபுரம் போன்ற புகழ்பெற்ற இடங்களிலும் ஒரு மணி நேரத்திற்கு விளக்குகள் அனைத்தும் அணைத்துவைக்கப்பட்டன என்று ஐ.நா. அறிக்கையொன்று கூறுகிறது.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.