2016-03-21 16:25:00

புனிதவாரச் சடங்குகள்- இந்தியக்கிறிஸ்தவர்களுக்குப் பாதுகாப்பு


மார்ச்,21,206. இந்தியக் கிறிஸ்தவர்கள் மீது, இந்து அடிப்படைவாதிகள் மேற்கொண்டுவரும் தாக்குதல்கள், அண்மைக்காலங்களில் அதிகரித்துள்ளதால், புனித வாரச் சடங்குகளின் போது, இந்தியக் கிறிஸ்தவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று, இந்திய கிறிஸ்தவ உலக அவை, அழைப்பு விடுத்துள்ளது.

இந்தியக் கிறிஸ்தவர்கள், ஏனைய குடிமக்கள்போல் உரிமை உடையவர்களாக நடத்தப்படுவதில்லை என்று, மனித உரிமைகள் தேசிய அவையில் குற்றச்சாட்டை முன்வைத்துள்ள இந்தியக் கிறிஸ்தவர்கள் உலக அவையின் தலைவர் சஜன் ஜார்ஜ் அவர்கள், கிறிஸ்தவ முறையில் வழிபடுவது, இந்தியாவில் தண்டனைக்குரிய குற்றமா என்ற கேள்வியையும் முன்வைத்துள்ளார்.

கிறிஸ்தவ சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த அப்பாவி மக்களை தாக்குவதன் வழியாக, இந்து அடிப்படைவாதிகள், இந்திய அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள மத உரிமைகளை மறுக்கின்றனர் என்று, சஜன் ஜார்ஜ் அவர்கள் கவலையை வெளியிட்டுள்ளார்.

கடந்த மாதம் 6ம் தேதி சட்டிஸ்கர் மாநிலத்தில் கிறிஸ்தவக் கோவில் ஒன்றில், இந்து  அடிப்படை வாதிகளால் 65 கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்டது; இம்மாதம், 11ம் தேதி, கர்நாடகா மாநிலத்தில் ஒரு கிறிஸ்தவப் போதகரும் அவர் மனைவியும் தாக்கப்பட்டு, பின் கைது செய்யப்பட்டது; 12ம் தேதி, தமிழகத்தின் Kalapatti எனுமிடத்தில் கிறிஸ்தவ ஆங்கிலிக்கன் கோவில் ஒன்று தாக்கப்பட்டது போன்ற நிகழ்வுகளை, சஜன் ஜார்ஜ் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.