2016-03-21 15:56:00

இது இரக்கத்தின் காலம் – இழக்கக் கூடாதது நம்பிக்கை


ஆசிரமக் குரு ஒருவரிடம், அவரின் மாணவர்கள் இப்படி ஒரு கேள்வி கேட்டனர். வாழ்வில் வரும் துன்பங்கள் மனிதரைப் பக்குவம் செய்து, பண்படுத்தி, அவரை உறுதியாக்க உதவுகின்றதுதானே? இந்தக் கேள்விக்கு இப்படிப் பதில் சொன்னார் குரு. குயவரின் தீ, களிமண்ணைப் பதமாக்கி, அழகிய குடமாக்கவும் முடியும், கரிமண்ணாக்கவும் முடியும். துன்பங்களையும், சவால்களையும் ஒருவர் எப்படி எதிர்கொள்கிறார், எப்படி ஏற்றுக்கொள்கிறார் என்பதைப் பொறுத்தே அவை அவரை உறுதியாக்கி, உருவாக்குமா, இல்லை, பலவீனப்படுத்தி உருக்குலைக்குமா என்பது இருக்கும். சுவாமி விவேகானந்தர் சொன்னார் - நீ பட்ட துன்பத்தைவிட, அதில் நீ பெற்ற அனுபவமே சிறந்தது என்று. ஆண்டவன் இந்தச் சோதனையை ஒருவருக்கு அளித்திருக்கிறான் என்றால், அதை வென்று வெற்றி கொள்ளும் திறமை அவருக்கு உள்ளது என்கிற காரணத்தில்தான்! கண்ணில் விழும் தூசி கண் பார்வையையே மறைக்கும். அதைத் துடைத்துப் போடுகையில்தான் தெரியும் அது கண் பார்வைக்குக்கூட அகப்படாத சின்னஞ்சிறிய தூசி என்று. ஆம். எதை இழந்தாலும் இழக்கக் கூடாதது நம்பிக்கை! இது இரக்கத்தின் காலத்தின் அழைப்பு.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.