2016-03-19 17:01:00

பாகிஸ்தானில் உயிர்ப்பு திருவிழா, கிறிஸ்தவர்களுக்கு விடுமுறை


மார்ச்,19,2016. பாகிஸ்தான் நாட்டில், கிறிஸ்து உயிர்ப்புப் பெருவிழாவை, கிறிஸ்தவர்களுக்கான சிறப்பு விடுமுறை நாளாக அறிவித்து தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது, அந்நாட்டு தேசிய அவை.

கிறிஸ்தவர்களுக்கு, கிறிஸ்து உயிர்ப்பு பெருவிழா நாளும், இந்துக்களுக்கு ஹோலி மற்றும் திபாவளி நாட்களும் சிறப்பு விடுமுறைகளாக அறிவிக்கப்பட்டுள்ளது, நாட்டிற்கு, பொது விடுமுறையல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் இந்து சிறுபான்மை சமூகத்தின் தேசிய அவை அங்கத்தினர் வெங்வானி ரமேஷ் குமார் என்பவரின் முயற்சியால், இச்சலுகை முதன் முறையாக பாகிஸ்தான் அரசால் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, பாகிஸ்தான் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து, ஒரே குடும்பமாக கொண்டாட உதவும் வகையில், சிறுபான்மையினரின் திருவிழாக்களை தேசிய விடுமுறைகளாக அறிவிக்கவேண்டும் என, சில இஸ்லாமிய குழுக்கள், அரசுக்கு அழைப்பு விடுத்துள்ளன.

ஆதாரம்: AsiaNews/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.