2016-03-19 13:34:00

இது இரக்கத்தின் காலம் – சிலுவை சொல்லித்தரும் பாடம்


William J. Bausch என்ற அருட்பணியாளர் எழுதிய ஒரு கதை இது. 19ம் நூற்றாண்டின் துவக்கத்தில் வாழ்ந்த ஓர் ஆயரைப் பற்றிய கதை. இந்த ஆயர் சிறந்த மறையுரையாளர். இறைவனை நம்பாதவர்கள், திருஅவையை வெறுத்துப் பழிப்பவர்கள் ஆகியோரைத் தேடிச்சென்று, அவர்களிடம் பேசி வந்தார், இந்த ஆயர். அவர்களிடம் அடிக்கடி ஒரு நிகழ்வை எடுத்துச் சொல்வது இவர் வழக்கம்.

பாரிஸ் நகரில் புகழ்பெற்ற Notre Dame பேராலயத்தின் வாசலில், ஒவ்வொரு ஞாயிறன்றும் இளைஞன் ஒருவர் நின்றுகொண்டு, ஞாயிறு திருப்பலிக்குச் செல்லும் அனைவரையும் முட்டாள்கள் என்று உரத்தக் குரலில் கேலிசெய்து வந்தார். கோவிலுக்குச் செல்பவர்கள் அவரைக் கண்டு பயந்து, ஒதுங்கி சென்றனர். ஒவ்வொரு வாரமும் இந்த இளைஞனின் ஆர்ப்பாட்டம் கூடிவந்தது.

ஒரு முறை, ஞாயிறு திருப்பலிக்கு முன், பங்குத்தந்தை, பேராலய வாசலுக்குச் சென்றார். அவரைக் கண்டதும், இளைஞனின் கேலிப்பேச்சு உச்ச நிலையை அடைந்தது. இளைஞனின் கேலிகளை எல்லாம் பொறுமையுடன் கேட்ட பங்குத்தந்தை அவரிடம், "நான் இப்போது உனக்கு விடுக்கும் சவாலை உன்னால் நிறைவேற்ற முடியாது. உனக்கு அவ்வளவு தூரம் வீரமில்லை" என்று கூறினார். இதைக் கேட்டதும் இளைஞனின் கோபமும், கேலியும் கட்டுக்கடங்காமல் சென்றன. "முட்டாள் சாமியாரே! எனக்கேச் சவால் விடுகிறாயா? சொல், எதுவாயினும் செய்து காட்டுகிறேன்." என்று அனைவரும் கேட்கும்படி கத்தினார். பங்குத்தந்தை அமைதியாகத் தொடர்ந்தார்: "கோவிலுக்குள் வா. பீடத்திற்கு முன் நின்று, சிலுவையில் இருக்கும் இயேசுவை உற்றுப்பார். பின்னர், உன்னால் முடிந்த அளவு உரத்தக் குரலில், 'கிறிஸ்து எனக்காக சிலுவையில் இறந்தார். ஆனால், அதைப்பற்றி எனக்குச் சிறிதும் கவலையில்லை' என்று நீ கத்தவேண்டும். உன்னால் முடியுமா?" என்று பங்குத்தந்தை சவால் விடுத்தார்.

அந்தச் சவாலைத் துச்சமாக மதித்த இளைஞன், பீடத்தை நெருங்கினார். பின்னர், உரத்தக் குரலில் "கிறிஸ்து எனக்காக சிலுவையில் இறந்தார். ஆனால், அதைப்பற்றி எனக்குச் சிறிதும் கவலையில்லை" என்று கத்தினார். பங்கு குரு அவரிடம், "நன்றாகக் கத்தினாய். இன்னொரு முறை கத்து" என்றார். இரண்டாவது முறையும் இளைஞன் கத்தினார். ஆனால், இம்முறை, அவரது குரலில் கொஞ்சம் தடுமாற்றம் தெரிந்தது. பங்குத்தந்தை, இளைஞனிடம், "தயவுசெய்து, இறுதியாக ஒரு முறை மட்டும் கோவிலில் உள்ள அனைவரும் கேட்கும்படி கத்திவிட்டு, பின்னர் நீ போகலாம்" என்று கூறினார். இம்முறை, இளைஞன் சிலுவையை உற்றுப்பார்த்தார். அவர் கத்த முற்பட்டபோது, வார்த்தைகள் வரவில்லை. சிலுவையில் அறையப்பட்டிருந்த இயேசுவை அவரால் தொடர்ந்து பார்க்க முடியவில்லை. கண்களைத் தாழ்த்தினார். கண்ணீர் வழிந்தோடியது.

இந்த நிகழ்வை விவரித்துக் கூறிய ஆயர், சிறிதுநேரம் அமைதியாக இருந்தபின், தொடர்ந்தார்: "அந்த இளைஞன் நான்தான். கடவுள் எனக்குத் தேவையில்லை என்று வாழ்ந்தவன் நான். ஆனால், கடவுள் எனக்குத் தேவை என்பதை, சிலுவையில் தொங்கிய இயேசு எனக்கு உணர்த்தினார். அது மட்டுமல்ல, நான் கடவுளுக்குத் தேவை என்பதையும் அவர் எனக்குப் புரியவைத்தார்" என்று கூறினார் அந்த ஆயர்.

மாற்றங்களை உருவாக்கும் மந்திரச் சக்திபெற்ற இரக்கத்தின் காலத்தில், சிலுவையில் அறையுண்ட இயேசு, நமக்குள் என்னென்ன மாற்றங்களை உருவாகப் போகிறார்?

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.