2016-03-16 17:20:00

முதுபெரும் தந்தை: எந்தப் படையோடும் திருஅவைக்குத் தொடர்பில்லை


மார்ச்,16,2016. 'பாபிலோனியப் படைகள்' (Babylon Brigades) என்ற பெயரில் ஈராக் நாட்டில் இயங்கி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ள குழுவுக்கும், கத்தோலிக்க திருஅவைக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று கல்தேய வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை, முதலாம் லூயிஸ் சாக்கோ அவர்கள் கூறினார்.

ஈராக்கில் உள்ள கிறிஸ்தவ சமுதாயத்தையும், நகரங்களையும் பாதுகாக்க, பாபிலோனியப் படைகள் உருவாக்கப்பட்டுள்ளதென வெளியாகியிருக்கும் கூற்றுகளுக்கும், கிறிஸ்தவ சமுதாயத்திற்கும் தொடர்பு இல்லை என்று முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார் என்று பீதேஸ் (Fides) செய்தி கூறுகிறது.

கிறிஸ்தவர்கள் என்று தங்களையே அழைத்துக்கொள்ளும் எந்த படையினரோடும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ கல்தேயத் திருஅவைக்குத் தொடர்பில்லை என்று முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள் தன் அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளார்.

பல்வேறு இஸ்லாமிய நாடுகளிலிருந்து ஈராக் நாட்டிற்குள் ஊடுருவியுள்ள இஸ்லாமியப் போராளிகளுக்கு எதிராக கிறிஸ்தவர்கள் உருவாக்கியுள்ள பாதுகாப்புப்படை, பாபிலோனியப் படைகள்' என்று பெயர் பெற்றுள்ளது என பீதேஸ் செய்தி மேலும் கூறுகிறது. 

ஆதாரம் : Fides /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.