2016-03-16 16:23:00

மறைக்கல்வி: இறைவாக்குகள், இயேசுவின் வருகையில் நிறைவைக் கண்டன


மார்ச்,16,2016. குளிர் காலத்தின் இறுதி வாரத்தில், வசந்த காலத்தின் வரவை நோக்கி எதிர்பார்த்து நிற்கின்றது உரோம் நகரம். மரங்கள் புது தளிர்களாலும், மலர்களாலும் சாலையோரங்களை அழகு செய்து நிற்க, சூரியனும் பிரகாசமாக தன் கதிர்களை வீச, உரோம் நகரின் அழகுக்கு அழகு சேர்க்கும் வகையில், திருப்பயணிகளின் கூட்டமும் பல்வேறு வண்ண ஆடைகளில், வத்திக்கான் தூய பேதுரு பேராலய வளாகத்தை நிறைத்திருக்க, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வார புதன் மறைக்கல்வி உரையை திருப்பயணிகளுக்கு வழங்கினார்.

அன்பு சகோதர சகோதரிகளே! இறை இரக்கத்திற்கென அர்ப்பணிக்கப்பட்டுள்ள இந்த யூபிலி ஆண்டில், நம் மறைக்கல்வி உரையின் தொடர்ச்சியாக இவ்வாரம் இறைவாக்கினர் எரேமியா நூலில் காணப்படும் ஆறுதலின் செய்தி குறித்து நோக்குவோம். இறைவனால் தேர்ந்துகொள்ளப்பட்ட  மக்கள், தங்கள் சொந்த நாட்டை விட்டு கடத்தப்பட்டவர்களாக, இன்னொரு நாட்டில் வாழ்ந்தபோது அடைந்த கொடுமையான அனுபவங்கள், அவர்களின் விசுவாசத்தை பெருமளவில் அசைத்துப் பார்க்கின்றன. இருப்பினும், அவர்களை எந்நிலையிலும் கைவிடாத இறைவன், அவர்களுக்கான தன் அன்பையும், மீட்பு குறித்த வாக்குறுதியையும் உறுதி செய்கிறார் என்று இறைவாக்கினர் எரேமியா உரைக்கிறார். இன்றைய உலகின் அனைத்துப் பகுதிகளிலும் மக்கள் அகதிகளாக துன்புறும் நிலைகளைக் காணும்போது, இறைவாக்கினர் எரேமியாவின் ஆறுதல் மற்றும் நம்பிக்கையின் வார்த்தைகள் சிறப்பான விதத்தில் புது அர்த்தத்தை நமக்குத் தருகின்றன. இறைவன் நமக்கு அருளுடன் வழங்கும் மன்னிப்பு, புதுப்பித்தல் மற்றும் புது துவக்கத்திற்கான வாய்ப்பு ஆகியவற்றைப் பற்றியும் இறைவாக்கினரின் வார்த்தைகள் உரைக்கின்றன. தரிசு நிலம் அழகிய தோட்டமாக மாறுவதும் அதன்பின் மகிழ்ச்சி நிறைந்த மக்கள் கூட்டம், சீயோன் மலை மீது ஏறுவதும் என்ற உருவகம், மரணத்திலிருந்து வாழ்வையும், தீமையிலிருந்து வாழ்வையும் கொண்டுவர வல்ல இறைவனின் வல்லமை குறித்துப் பேசுகின்றன. எரேமியாவின் இறைவாக்குகள், இயேசுவின் வருகையில் தம் முழு நிறைவைக் கண்டன. ஏனெனில், இறைவனின் இரக்கம் நிறை அன்பையும், ஒப்புரவு, புதுப்பித்தல் மற்றும் முடிவற்ற வாழ்வு குறித்த இறைவனின் வாக்குறுதிகளின் வெற்றியையும் மக்களுக்கு ஓங்கிய குரலில் எடுத்துரைப்பதாக இயேசுவின் பாஸ்கா மறையுண்மை இருந்தது.

இவ்வாறு தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.