2016-03-16 16:56:00

உலக ஆசிரியர் விருதினை அறிவித்த திருத்தந்தை


மார்ச்,16,2016. உலக ஆசிரியர் விருதுக்கு, என் பெயரை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அறிவித்ததை என்னால் இன்னும் நம்பமுடியவில்லை என்று, இந்த விருதைப் பெற்ற பாலஸ்தீன ஆசிரியர், Hanan Al Hroub அவர்கள் CNA செய்தியிடம் கூறினார்.

கேரளாவில் பிறந்து, தற்போது துபாயில் வாழும் சன்னி வர்கி என்பவர் உருவாக்கிய வர்கி அறக்கட்டளை, கடந்த ஈராண்டுகளாக, Global Teacher Prize அதாவது, உலக ஆசிரியர் விருதினை வழங்கி வருகிறது.

பாலஸ்தீன நாட்டின் West Bank பகுதியில், வன்முறைகள் நடுவில் வாழ்ந்துவரும் சிறுவர் சிறுமியருக்கு ஆசிரியப் பணியாற்றிவரும் Hanan Al Hroub என்ற பெண்மணிக்கு 2015ம் ஆண்டுக்கான இவ்விருது வழங்கப்பட்டது.

துபாய் நகரில் இஞ்ஞாயிறன்று நடைபெற்ற ஒரு விழாவில், உலக ஆசிரியர் விருதினை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஒலி ஒளி தொடர்பின் வழியே, வத்திக்கானில் இருந்தபடியே அறிவித்தார்.

இவ்விருதினைப் பெற்ற Hanan Al Hroub அவர்கள் விளையாட்டின் வழியே குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்க முற்பட்டதை, திருத்தந்தை, தன் செய்தியில் சிறப்பாகக் குறிப்பிட்டுப் பேசினார்.

விளையாடுவது, குழந்தைகளின் உரிமை; விளையாட்டு நேரங்களில் குழந்தைகள் கற்றுக்கொள்ளக்கூடிய சமுதாயத் திறமைகள் அதிகம் என்பதால், விளையாட்டை, கல்வியின் அடிப்படை அம்சமாக நாம் இணைக்கவேண்டும் என்று திருத்தந்தை இச்செய்தியில் கூறினார்.

உலக ஆசிரியர் விருதினைப் பெற்ற Hroub அவர்கள், பாலஸ்தீனாவில், வன்முறைச் சூழலில் வளர்ந்துவரும் குழந்தைகளுக்கு, Samiha Khalil என்ற பள்ளியில், விளையாட்டுக்கள் வழியே பல்வேறு நன்னெறி பழக்கங்களை வளர்த்துள்ளார் என்பதால், அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விருதின் வழியே Hroub அவர்கள் பெற்ற 10 இலட்சம் டாலர்களை, சிறுவர் சிறுமியரின் கல்விக்கு உதவித் தொகைகளை உருவாக்கும் நோக்கத்தில் இருப்பதாக கூறினார்.

ஆதாரம் : CNA/EWTN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.