2016-03-16 16:48:00

அன்னை தெரேசாவின் முகம், இரக்கத்தின் முகம் - கர்தினால் டோப்போ


மார்ச்,16,2016. ஒவ்வொரு மனிதரும் இறைவனின் சாயல் என்பதால், அவர்களுக்குரிய மதிப்பை அளித்த அன்னை தெரேசா, மக்களின் வாழ்வை, மன்னிப்பின் வழியாகவும், குணப்படுத்துதல் வழியாகவும் கட்டியெழுப்பினார் என்று இந்திய கர்தினால் ஒருவர் கூறினார்.

அருளாளர் அன்னை தெரேசா, செப்டம்பர் 4ம் தேதி புனிதராக உயர்த்தப்படவிருக்கும் செய்தியைத் தொடர்ந்து, இராஞ்சி பேராயர் கர்தினால் Telesphore Toppo அவர்கள், ஆசிய செய்திக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார்.

அன்னை தெரேசாவின் முகம் இரக்கத்தின் முகம் என்பதை உலகினர் அனைவரும் அறிவர்; எனவே, அவரது புனிதர் பட்ட விழா இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில் நிகழ்வது மிகப் பொருத்தமானது என்று கர்தினால் டோப்போ அவர்கள், தன் பேட்டியில் சுட்டிக்காட்டினார்.

அன்னை தெரேசா அவர்கள், உடலளவில் தளந்திருந்தாலும், இத்தனை சக்தியை எங்கிருந்து பெறுகிறார் என்று தான் ஒருமுறை கேட்டபோது, அன்னை தெரேசா எவ்வித தயக்கமும் இல்லாமல், நற்கருணையில் உள்ள இயேசுவிடமிருந்து தன் சக்தியைப் பெறுவதாகக் கூறியதை, கர்தினால் டோப்போ அவர்கள், தன் பேட்டியில் குறிப்பிட்டார்.

அன்னை தெரேசா அவர்கள் சிறுமி ஆக்னெஸ் என்ற பெயருடன் பள்ளியில் படித்துவந்த வேளையில், இராஞ்சி பகுதியில் பணியாற்றிய ஆல்பேனியாவை சேர்ந்த இரு இயேசு சபை அருள் பணியாளர்கள், பள்ளியில் வழங்கிய ஓர் உரையிலிருந்து, அன்னை தெரேசா அவர்கள், இந்தியாவில் உழைக்கும் அழைப்பை பெற்றார் என்பதை கர்தினால் டோப்போ அவர்கள் நினைவு கூர்ந்தார்.

அன்னை தெரேசா புனிதராக உயர்த்தப்படும் இந்நிகழ்வு, ஆசியாவில் பணியாற்றும் பலருக்கு, மறைபரப்புப் பணியாற்றும் உந்து சக்தியாக அமையும் என்று கர்தினால் டோப்போ அவர்கள் தன் பேட்டியில் குறிப்பிட்டார்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.