2016-03-15 16:40:00

விவிலியம் : காலமெலாம் வாழும் கருணைக் கருவூலம் - பகுதி – 13


திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கத்தோலிக்கத் திருஅவையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் 3ம் ஆண்டு நிறைவை, மார்ச் 13, கடந்த ஞாயிறன்று, நாம் சிறப்பித்தோம். அன்று, புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு நண்பகல் மூவேளை செப உரை வழங்கியத் திருத்தந்தை, அங்கு கூடியிருந்தோருக்கு ஒரு பரிசளித்தார். லூக்கா நற்செய்தியின் கையடக்கப் பிரதி ஒன்று அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட்டது. அந்தப் பிரதியை மக்களுக்கு வழங்க, முதிர்ந்த வயதினர் பலர் முன்வந்திருந்தனர். அதைக் கண்டத் திருத்தந்தை, "தாத்தா, பாட்டி ஆகியோரிடமிருந்து நற்செய்தியை பரிசாகப் பெற்றுச் செல்கிறீர்கள். இது, அழகியதோர் அடையாளம். உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள லூக்கா நற்செய்தி, 'இரக்கத்தின் நற்செய்தி' என்று அழைக்கப்படுகிறது. தாத்தா, பாட்டி வழியே நீங்கள் பெற்றுக்கொண்ட இறைவனின் இரக்கத்தை, மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்" என்று கூறினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் தலைமைப் பணியில் பதித்துள்ள ஓர் அழகிய முத்திரை இரக்கம் என்பதை, உலக ஊடகங்கள் அடிக்கடி சுட்டிக்காட்டி வருகின்றன. Zenit எனப்படும் கத்தோலிக்கச் செய்தி நிறுவனத்தில் பணியாற்றும் அந்தோனியோ கஸ்பாரி (Antonio Gaspari) என்ற செய்தியாளர், திருத்தந்தையின் மூன்றாண்டு பணியைக் குறித்து "A Cyclone Called Francis - The Social and Political Revolution of the Pope Who Came From the End of the World" அதாவது, "பிரான்சிஸ் என்றழைக்கப்படும் புயல் - உலகின் கடைக்கோடியிலிருந்து வந்திருக்கும் திருத்தந்தையின் சமுதாய, அரசியல் புரட்சி" என்ற தலைப்பில், ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளார். இக்கட்டுரையில் அவர் கூறியுள்ள ஒரு சில கருத்துக்கள், திருத்தந்தையையும், இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டையும் இணைத்துப் பேசுவதால், இக்கட்டுரையின் ஒரு சில கருத்துக்களை பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.

"அண்மைய ஆண்டுகளில், உலகின் பல நாடுகளில் வன்முறையின் வெறியாட்டம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. இதற்கு ஒரு மாற்றாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒப்புரவை உலகில் பரப்ப முயன்று வருகிறார்" என்று தன் கட்டுரையைத் துவக்கும் கஸ்பாரி அவர்கள், திருத்தந்தை கொணர்ந்த ஒரு சில அரசியல் ஒப்புரவுகளைச் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளில் திருத்தந்தை கொணர முயன்ற அரசியல் ஒப்புரவுகளை, நம் நினைவுகளும் அசைபோடுகின்றன.

1961ம் ஆண்டு முதல், அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கும், கியூபாவுக்கும் இடையே அரசியல் உறவுகள் துண்டிக்கப்பட்டன. அதை மீண்டும் சரி செய்து, இரு நாடுகளும் தங்கள் அரசியல் உறவை, கடந்த ஆண்டு ஜூலை மாதம் புதுப்பித்துள்ளன. இதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர், திருத்தந்தை பிரான்சிஸ் என்பதை, இரு நாட்டு அரசுத் தலைவர்களும் வெளிப்படையாகக் கூறியுள்ளனர்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2014ம் ஆண்டு, புனித பூமிக்கு திருத்தூதுப் பயணம் மேற்கொண்டபோதும், அதைத் தொடர்ந்து, இஸ்ரேல் பாலஸ்தீனா நாட்டுத் தலைவர்களை, வத்திக்கானுக்கு வரவழைத்தபோதும், இவ்விரு நாடுகளுக்குமிடையே ஒப்புரவை உருவாக்க அவர் மேற்கொண்ட முயற்சிகள், உலக ஊடகங்களால் பாராட்டப்பட்டன.

கொலம்பியா, சிலே, பொலிவியா ஆகிய இலத்தீன் அமெரிக்க நாடுகளிலும், இரஷ்யா, உக்ரைன் நாடுகளிலும் அமைதி நிலவ, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொண்டுள்ள முயற்சிகளும் உலகறிந்த உண்மை.

பல ஆண்டுகளாக, உள்நாட்டுப் போரினால் காயப்பட்டிருந்த இலங்கையில், 2015ம் ஆண்டின் துவக்கத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் காலடி பதித்தது, அந்நாட்டிற்குத் தேவையான ஆறுதலைக் கொணர்ந்தது.

மத்திய ஆப்ரிக்கக் குடியரசில், வன்முறைகள் ஒழிந்து ஒப்புரவு வளரவேண்டும் என்ற வேண்டுதலுடன், அந்நாட்டின் தலைநகரான பாங்கியில் பேராலயக் கதவை, புனிதக் கதவாக திறந்து, இரக்கத்தின் யூபிலி ஆண்டினை அந்நாட்டில் திருத்தந்தை துவக்கி வைத்தார் என்று சென்ற விவிலியத் தேடலில் குறிப்பிட்டோம்.

ஓர் ஆன்மீகத் தலைவர் என்ற முறையில், அரசியல் தளத்தில் ஒப்புரவையும், அமைதியையும் கொணர பாடுபட்டுவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பொருளாதார உலகில் நிலவும் அவலங்களையும், சுற்றுச் சூழலுக்கு நாம் இழைத்துவரும் கொடுமைகளையும் சுட்டிக்காட்டியதன் வழியே, மனிதர்களுக்குள்ளும், மனிதர்களுக்கும், இயற்கைக்கும் இடையிலும், ஒப்புரவை உருவாக்கப் பாடுபட்டு வருகிறார்.

ஆர்த்தடாக்ஸ் சபைகள், கிறிஸ்தவ சபைகள் ஆகியவற்றுடன்  கத்தோலிக்கத் திருஅவை மேற்கொள்ள வேண்டிய ஒப்புரவில், திருத்தந்தை, அதிக ஆவலுடன் செயலாற்றுவதை இந்த மூன்று ஆண்டுகளில் தெளிவாகக் காண முடிந்தது.

கிறிஸ்தவம் என்ற வட்டத்தைத் தாண்டி, யூத, மற்றும் இஸ்லாமிய மதங்களோடு உண்மையான, பணிவான மனதோடு உரையாடல் நடத்த திருத்தந்தை முயற்சிகள் மேற்கொண்டு வருவது, மற்றொரு ஒருங்கிணைப்பு முயற்சியாக விளங்குகிறது.

இவ்வாறு, அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம், சுற்றுச்சூழல் என்று பல தளங்களிலும் ஒப்புரவையும், ஒருங்கிணைப்பையும் உருவாக்க முயல்வது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, ஓர் அமைதியின் தூதராய், இரக்கத்தின் வடிகாலாய் இவ்வுலகிற்கு அடையாளம் காட்டிவருகிறது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆற்றிவந்துள்ள மூன்று ஆண்டு பணியின் ஒரு சிகரமாக, கடந்த டிசம்பர் 8ம் தேதி துவக்கப்பட்ட இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டு விளங்குகிறது.

யூபிலி ஆண்டின் துவக்க நிகழ்வாக, உலகெங்கும் திறக்கப்பட்ட புனிதக் கதவுகளைக் குறித்து நாம் சென்ற விவிலியத் தேடலில் சிந்தித்தோம். யூபிலி ஆண்டுகள், புனிதக் கதவுகள் ஆகியவை திருஅவை வரலாற்றில் பெற்றிருந்த குறிப்பிட்ட அர்த்தங்களை விரிவுபடுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மாற்றங்களைக் கொணர்ந்தார் என்பதையும் சென்ற வாரம் சிந்தித்தோம். அத்தேடலின் இறுதியில், “புனிதக் கதவு வழி நுழைவோர், நிறையருள் பலனைப் (பரிபூரணப் பலன்) பெறுவர் என்பது, யூபிலி ஆண்டுக்கென வழங்கப்பட்டுள்ள தனி வரம். இந்த எண்ணத்திலும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த மாற்றங்களை நாம் அடுத்தத் தேடலில் சிந்திப்போம்” என்று நம் தேடலை நிறைவு செய்தோம். இன்று தொடர்கிறோம்.

திருஅவை வரலாற்றில், யூபிலி ஆண்டு கொண்டாட்டங்களுடன், 'பரிபூரணப் பலன்' என்ற எண்ணம் மிக நெருங்கியத் தொடர்பு கொண்டுள்ளது. 'பரிபூரணப் பலன்' என்ற சொற்றொடர், ஆங்கிலத்தில், 'Plenary Indulgence' என்று அழைக்கப்படுகிறது. 'Plenary' என்ற சொல், முழுமையான, பூரணமான என்று பொருள்படும். 'Indulgence' என்ற சொல், இலத்தீன் மொழியில், 'Indulgeo' என்ற சொல்லிலிருந்து உருவானது. இச்சொல்லின் பொருள், 'கனிவாக இருப்பது'.

இறைவனின் கனிவை, கருணையை முன்னிலைப்படுத்தும் 'பரிபூரணப் பலன்' என்ற சொற்றொடர், திருஅவை வரலாற்றில் பல்வேறு அர்த்தங்களைப் பெற்று, பெருமளவு சிதைந்துவிட்டது என்றே கூறவேண்டும். குறிப்பாக, 14, 15 ஆகிய இரு நூற்றாண்டுகளில், பரிபூரணப் பலனைத் தரும் அதிகாரம் யாருக்கு உண்டு என்ற கேள்வியாலும், இப்பலனை அடைய என்ன கொடுக்கவேண்டும் என்ற வியாபார எண்ணங்கள் எழுந்ததாலும், இச்சொற்றொடர், தன் உண்மையான அர்த்தத்தை இழந்துபோனது. இறை இரக்கத்தை முன்னிலைப்படுத்தும் 'Indulgence' என்ற சொல்லின் முதன்மையான அர்த்தம், இந்த யூபிலி ஆண்டில் மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது என்று சொன்னால், அது மிகையல்ல.

இரக்கத்தின் யூபிலி ஆண்டில், நாம் பெறக்கூடிய 'பரிபூரணப் பலன்' குறித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஒரு மடலை எழுதியுள்ளார். இந்த யூபிலி ஆண்டின் அனைத்து நிகழ்வுகளையும் ஒருங்கிணைக்கும் பேராயர் ரீனோ பிசிக்கெல்லா (Rino Fisichella) அவர்களுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதியுள்ள மடலில், 'பரிபூரணப் பலன்' என்ற சொற்றொடர், தன் முதன்மையான அர்த்தத்தை மீண்டும் பெறுவதைக் காண முடிகிறது.

"இந்தப் புனித ஆண்டு கொண்டாட்டங்கள் வழியே, அனைத்து விசுவாசிகளும், இறைவனின் இரக்கத்தை நேருக்கு நேர் அனுபவிப்பதற்கு உதவியாக, ஒரு சில விவரங்களைப் பகிர்ந்துகொள்ள விழைகிறேன். விண்ணகத் தந்தையின் அருகாமையை உணர்வதும், அவர் மென்மையான உள்ளம் கொண்டவர் என்ற உண்மையில் விசுவாசிகள் இன்னும் ஆழமாய் நம்பிக்கை கொள்வதும், இந்த யூபிலியில் அனைவரும் பெறவேண்டிய அனுபவமாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன்" என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இம்மடலின் ஆரம்பத்தில் கூறியுள்ளார்.

இந்த ஆரம்ப வரிகளைத் தொடர்ந்து, விண்ணகத் தந்தையின் இரக்கத்தைக் குறித்து திருத்தந்தை எழுதியுள்ள ஒருசில வரிகள், பல இறையியல் எழுத்தாளர்கள் நடுவே ஆழ்ந்த தாக்கங்களை உருவாக்கியுள்ளன. திருத்தந்தை கூறுவது இதுதான்:

"அவரவர், தங்கள் மறைமாவட்டங்களிலோ அல்லது உரோம் நகரிலோ மேற்கொள்ளும் திருப்பயணங்கள் வழியே, யூபிலியின் அருளை அனைவரும் அனுபவிக்கவேண்டும். 'யூபிலியின் பரிபூரணப் பலன்' என்பது, இறைவனின் இரக்கம் என்ற உண்மையை அனைவரும் உணரும் அனுபவமாக அமையவேண்டும். நாம் செய்த பாவங்களை முற்றிலும் மறந்து, மன்னித்து, வரவேற்பளிக்கும் தந்தையின் உருவில், இறைவனின் இரக்கம் நம்மை வந்தடைகிறது என்பதே அந்த அனுபவம்" என்று திருத்தந்தை எழுதியுள்ள வார்த்தைகள் நல்ல அதிர்வுகளை உருவாக்கியுள்ளன.

National Catholic Reporter என்ற வலைத்தளச் செய்தி நிறுவனத்தில் பணியாற்றும் Michael Sean Winters என்ற பத்திரிகையாளர், 'Distinctly Catholic' என்ற பெயரில் ஒரு வலைப்பதிவை (blog) உருவாக்கியுள்ளார். கத்தோலிக்கச் செய்திக் கழகத்தின் விருதினைப் பெற்றுள்ள இந்த வலைப்பதிவில், Winters அவர்கள், திருத்தந்தை எழுதியுள்ள இம்மடலைக் குறித்துப் பேசுகையில், இந்த வரிகளை, குறிப்பாகச் சுட்டிக் காட்டியுள்ளார். "நாம் செய்த பாவங்களை முற்றிலும் மறந்து, மன்னித்து..." என்று திருத்தந்தை வர்ணிக்கும் விண்ணகத் தந்தை, இதுவரை நம் மறைக்கல்வி ஏடுகளில் வெளிப்படையாக இடம்பெறாமல் விட்டுப்போன விண்ணகத் தந்தை என்று Winters அவர்கள் தன் கட்டுரையில் கூறியுள்ளார்.

இரக்கத்திற்கும், மன்னிப்பிற்கும் இலக்கணமாய் விளங்கும் விண்ணகத் தந்தை, நம் பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பார் என்பதை அனைவரும் அறிவோம். ஆனால், அவர் நம் பாவங்களை மறந்துவிடுவார் என்று சொல்வது, அதையும், ஒரு திருத்தந்தை சொல்வது, புதிதான ஓர் அனுபவம் என்று, Winters அவர்கள், தன் கட்டுரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மறப்பது, மன்னிப்பது, வரவேற்பது.... இவையே, விண்ணகத் தந்தையின் உண்மையான இயல்பு. மூன்று ஆண்டுகளுக்கு முன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் தன் முதல் ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையை வழங்க வந்தபோது, தந்தையின் மன்னிக்கும் பண்பைக் குறித்து சொன்னது, மீண்டும் நம் நினைவுக்கு வருகிறது: "இறைவனின் பொறுமைக்கு அளவே இல்லை. இதை நாம் மறந்துவிடக் கூடாது: மன்னிப்பதில் கடவுள் சலிப்படைவதேயில்லை. மன்னிப்பு கேட்பதில் நாம்தான் சலிப்படைந்து விடுகிறோம்."

மன்னிப்பதையும், மறப்பதையும் இணைத்து சொல்லப்பட்டுள்ள பல கதைகளில் என் உள்ளத்தில் ஆழமாய்ப் பதிந்த ஒரு கதை இது:

கணவன், மனைவி இருவருக்கும் இடையே நிகழ்ந்த ஓர் உரையாடலில், "நான் செய்த தவறை மன்னித்து, மறந்துவிட்டதாகச் சொல்கிறாய். பின், ஏன் மீண்டும், மீண்டும் அதைப் பற்றிப் பேசுகிறாய்?" என்று கணவன் தன் மனைவியிடம் கேட்கிறார். அதற்கு, மனைவி, "நான் மறந்து, மன்னித்துவிட்டேன். ஆனால், நான் மறந்துவிட்டேன் என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் அடிக்கடி உங்களுக்கு அதை நினைவுபடுத்துகிறேன்" என்று பதில் சொல்கிறார்.

பக்தனுக்கும், பரமனுக்கும் இடையே நிகழும் ஓர் உரையாடலில், "என் குற்றங்களை மன்னித்து, மறந்துவிடு, இறைவா!" என்று பக்தன் வேண்டுகிறார். அதற்கு, பரமன், "எந்தக் குற்றங்கள்? எனக்கு எதுவுமே நினைவில் இல்லையே!" என்று பதில் சொல்கிறார்.

நம் குற்றங்களை மறந்து, மன்னித்து, வரவேற்கக் காத்திருக்கும் வானகத் தந்தையின் இயல்பில், ஒரு துளி அளவாகிலும் நம் இயல்பாக மாறினால், இவ்வுலகம் இரக்கத்தில் நனையும்.

இரக்கத்தின் யூபிலி ஆண்டில், இத்தகைய இறைவனை நம் எண்ணங்களில் ஆழப் பதிக்க, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பல வழிகளில் முயற்சி எடுத்து வருகிறார். மறந்து, மன்னித்து, வரவேற்கும் விண்ணகத் தந்தையின் இரக்கம், 'பரிபூரணப் பலன்' வழியே நம்மை அடைகிறது என்று தன் மடலில் கூறும் திருத்தந்தை, இந்தப் பலனை அடையும் பல வழிகளை, இம்மடல் வழியே திறந்துவைத்துள்ளார். இந்த வழிகளைப் புரிந்துகொள்ள, நாம் அடுத்தத் தேடலில் முயலும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.