2016-03-15 17:18:00

சிரியா மனித உரிமை மீறல்கள் குறித்து திருப்பீடம் கவலை


மார்ச்,15,2016. அண்மையில் சிரியாவில் நடக்கும் வன்முறைகளையும், புலம்பெயர்ந்தோர் வெளியேறலையும் நோக்கும்போது, அனைத்துலக மனிதாபிமான சட்டங்கள் மதிப்பிழந்ததுபோல் காணப்படுகிறது என கவலையை வெளியிட்டார், திருப்பீட அதிகாரி Richard Gyhra. 

ஜெனிவாவிலுள்ள ஐ.நா. அமைப்புகளுக்கான திருப்பீடச் செயலகத்தின் அதிகாரி அருள்பணி Gyhra அவர்கள், ஐ.நா. மனித உரிமைகள் அவையில் உரையாற்றியபோது, இன்றைய காலக்கட்டத்தில் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் தண்டனையின்றி போவதையும், பொதுமக்களுக்கு எதிரான திட்டமிட்ட தாக்குதல்கள் தினமும் இடம்பெறுவதையும் காணமுடிகின்றது என்றார்.

தற்போது சிரியாவில் துவக்கப்பட்டுள்ள அமைதி நடவடிக்கைகள் தோய்வின்றி முன்னெடுத்துச் செல்லப்படவேண்டும் என்ற விண்ணப்பத்தையும் திருப்பீடத்தின் சார்பில் முன்வைத்தார் அருள்பணி Gyhra.

சிரியாவின் பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டுமெனில், சண்டையிடும் அனைத்துத் தரப்பினரையும், அனைத்துலக சமுதாயத்தையும் உள்ளடக்கிய உண்மையான பேச்சுவார்த்தைகள் இடம்பெறவேண்டிய அவசியத்தையும் ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தில் எடுத்துரைத்தார், அருள்பணி Gyhra. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.