2016-03-15 17:06:00

ஐரோப்பா, தடுப்புச் சுவரை எழுப்புவது தவறு- இத்தாலிய கர்தினால்


மார்ச்,15,2016. புலம்பெயர்ந்தோரும், குடியேற்றதார்களும், ஏழை லாசர்  போல, நம் கதவுகளைத் தட்டிக் கொண்டிருக்கும்போது, மனித உரிமைகளுக்கும், கலாச்சாரத்திற்கும் தொட்டில் என்றழைக்கப்படும் ஐரோப்பா, தடுப்புச் சுவர்களையும், தாண்டமுடியாத அகழிகளையும் உருவாக்கிகொண்டிருப்பது தவறு என்று இத்தாலிய ஆயர் பேரவையின் தலைவர், கர்தினால் ஆஞ்செலோ பஞாஸ்கோ (Angelo Bagnasco) அவர்கள் கூறினார்.

இத்தாலிய ஆயர் பேரவையின் நிரந்தரக் குழுவினரை, இத்திங்களன்று சந்தித்த கர்தினால் பஞாஸ்கோ அவர்கள், மத்தியக் கிழக்குப் பகுதியில் கிறிஸ்தவர்கள் படும் துயரங்கள், புலம்பெயர்ந்தோர் பிரச்சனை என்ற பல்வேறு விடயங்கள் குறித்து பேசினார்.

புலம்பெயர்ந்தொரைப் பொருத்தவரை, உலக அளவில் புறக்கணிப்பு நிலவிவருகிறது என்ற கவலையை வெளியிட்ட கர்தினால் பஞாஸ்கோ அவர்கள், இத்தாலிய கத்தோலிக்க அமைப்புக்கள், 45,000 புலம் பெயர்ந்தோருக்கு புகலிடம் அளித்துள்ளது குறித்து மகிழ்ச்சியையும் வெளியிட்டார்.

இத்தாலியச் சமுதாயம் மெதுவாக சிதைந்து வருகிறது என்பதைக் குறிப்பிட, கடந்த ஆண்டு, இத்தாலியில் 6,53,000 இறப்புக்கள் நிகழ்ந்ததையும், 4,88,000 பிறப்புக்களே இருந்தன என்பதையும் சுட்டிக் காட்டியபின், ஏறத்தாழ ஒரு இலட்சம் இத்தாலியர் வேறு நாடுகளில் குடியேறியுள்ளதையும் கர்தினால் பஞாஸ்கோ அவர்கள் குறிப்பிட்டார். 

ஆதாரம் : CWN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.