2016-03-14 16:21:00

தீமைகளைக் களைவதற்கு நம் விசுவாசம் அழைப்பு விடுக்கிறது


மார்ச்,14,2016. வீடற்ற மனிதர் ஒருவர் அண்மையில், உரோம் நகர் சாலையில் குளிரால் உயிரிழந்தது, ஏமன் நாட்டில் அன்னை தெரேசா சபை அருள்சகோதரிகள் கொலை செய்யப்படடது போன்றவற்றிற்கு நமக்குக் கிடைக்கும் ஒரே பதில், இறைவன் மீதான நம்பிக்கையின் வழியேதான் என கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்திங்கள் காலை, தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இன்றைய உலகில் நாம் காணும் துன்பங்கள், குழந்தைகளின் நோய்கள், ஏழைகளின் பசி மரணங்கள் போன்றவற்றிற்கு நியாயமான பதில் இல்லையெனினும், இறைவனின் விசுவாசம் வழி வரும் அக்கறைக்கு இது அழைப்பு விடுப்பதாக உள்ளது என்றார்.

தீமை என்பது இறுதி அல்ல, ஏனெனில், நமதாண்டவர் நம்மோடு நடைபோடுகிறார் என்ற கூற்றை வலியுறுத்திய திருத்தந்தை, இவ்வுலகின் தீமைகளுக்குரிய காரணம் நமக்குப் புரியவில்லையெனினும், அவற்றைக் களைவதற்கும், பாதிக்கப்பட்டோருக்கு அக்கறை காட்டுவதற்கும் நம் விசுவாசம் அழைப்புவிடுக்கிறது என மேலும் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.