2016-03-14 16:31:00

ஐவரி கோஸ்ட்டில் பலியானோருக்கு திருத்தந்தையின் அனுதாபம்


மார்ச்,14,2016. ஐவரி கோஸ்ட் நாட்டின் Grand-Bassam எனுமிடத்தில் நிகழ்ந்த குண்டுத் தாக்குதலில் பலியானோருக்கு தன் ஆழ்ந்த அனுதாபங்களையும், காயமடைந்தோருடன் தன் அருகாமையையும் வெளிப்படுத்தும் வகையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தந்தியொன்றை அனுப்பியுள்ளார்.

Grand-Bassam மறைமாவட்ட ஆயர், Raymond Ahoua அவர்களுக்கு, திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், திருத்தந்தையின் சார்பில் அனுப்பியுள்ள இத்தந்தியில், எவ்வடிவத்தில் வெளிப்படும் வன்முறையும் கண்டனத்திற்குரியது என்று குறிப்பிட்டுள்ளார்.

இறந்தோர் அனைவரையும் இறைவன் தன் அமைதியிலும், ஒளியிலும் இணைக்க வேண்டும் என்றும், இறந்தோரின் குடும்பங்களுக்கு இறைவன் ஆறுதலாக இருக்கவேண்டும் என்றும் தான் மன்றாடுவதாக, இந்த அனுதாபத் தந்தியில் திருத்தந்தை கூறியுள்ளார்.

மார்ச் 13, இஞ்ஞாயிறன்று Grand-Bassam என்ற சுற்றுலாப் பயணியர் தலத்தில், இஸ்லாமியத் தீவிரவாதக் குழுவைச் சேர்ந்த 6 பேர் மேற்கொண்ட கண்மூடித்தனமான சுடுதலால், 4 ஐரோப்பிய பயணிகள் உட்பட, 16 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.