2016-03-14 16:49:00

இரக்கத்திற்கும் வன்முறைக்கும் இடையே நிறுத்தப்பட்ட பெண்


மார்ச்,14,2016. இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகம் காண்பிக்கும், 'விபசாரத்தில் பிடிபட்ட பெண்' பற்றிய நிகழ்வில், இயேசுவின் அணுகுமுறை, இரக்கம் நிறைந்ததாகவும், அதேவேளை, மறைநூல் அறிஞர்களின் எதிர்பார்ப்புக்கு எதிராகச் செல்வதாகவும் உள்ளது எனக் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்நற்செய்தி வாசகம் குறித்து தன் நண்பகல் மூவேளை செப உரையில் எடுத்துரைத்த திருத்தந்தை, இறைமகனின் இரக்கத்திற்கும், பரிசேயர்களின் வன்முறை நிலைகளுக்கும் இடையே இப்பெண் நிறுத்தப்பட்டார் என்றார்.

உங்களுள் குற்றமற்றவர் முதலில் கல்லை எறியட்டும் என இயேசு கூறியதைக் கேட்ட கூட்டம், ஒவ்வொருவராக பின்வாங்கிச் சென்றதைப்பற்றியும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறுதியில் அங்கு நின்றது இயேசுவும் அப்பெண்ணுமே, அதாவது இரக்கமும், இரக்கத்தின் தேவையுள்ளவருமே, என்றார்.

நாமும் நம் பாவங்களை உணரும்போது, மற்றவர்களைத் தீர்ப்பிடும் மனநிலையிலிருந்து வெளிவருவதுடன், இயேசுவின் வழியான மீட்பையும் அடைவோம் என மேலும் கூறினார் திருத்தந்தை.

இதே நாளில், மூவேளை செப உரைக்குப் பின், லூக்கா நற்செய்தியின் கையடக்கப் பிரதிகள், தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.