2016-03-14 16:40:00

அங்காரா குண்டுவெடிப்பில் பலியானோருக்கு அனுதாபத் தந்தி


மார்ச்,14,2016. துருக்கி நாட்டின் அங்காராவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் பலியானோர், மற்றும் காயமடைந்தோர் ஆகியோருக்கு அனுதாபம் தெரிவிக்கும் தந்தியொன்றை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியுள்ளார்.

துருக்கி குடியரசின் தலைவர், Recep Tayyip Erdoğan அவர்களுக்கு, திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், திருத்தந்தையின் சார்பில் அனுப்பியுள்ள இத்தந்தியில், துருக்கி அரசுத் தலைவரோடும், மக்களோடும் திருத்தந்தை ஆன்மீக அளவில் ஒன்றித்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்தத் துயரமிகு வன்முறையின்போது, உதவிகள் செய்துவரும் பாதுகாப்புப் படையினர், மற்றும் ஏனைய உதவியாளர்கள் அனைவரையும் இறைவன் ஆசீர்வதிக்கவேண்டும் என்று, திருத்தந்தை தன் தந்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மார்ச் 13, இஞ்ஞாயிறு மாலை, அங்காராவில், Guven Park எனுமிடத்தில், ஒரு காரில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் 32 பேர் கொல்லப்பட்டனர், மற்றும் 100க்கும் அதிகமானோர் காயமடைந்தனர் என்று, ஊடகங்கள் கூறுகின்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.