2016-03-12 15:20:00

இது இரக்கத்தின் காலம் - மன்னிப்பதில் கடவுள் சலிப்படைவதில்லை


2013ம் ஆண்டு, மார்ச் 13ம் தேதி, திருஅவையின் தலைவராக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பொறுப்பேற்றார். அவர் தலைமைப் பொறுப்புக்கு தெரிவு செய்யப்பட்ட மூன்றாம் ஆண்டு, இஞ்ஞாயிறன்று நிறைவுறுகிறது. தலைமைப் பொறுப்பேற்ற பின், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மார்ச் 17, ஞாயிறன்று, புனித பேதுரு வளாகத்தில், முதல் முறையாக, நண்பகல் மூவேளை செப உரையை வழங்க வந்தார். அன்று, இஞ்ஞாயிறைப்போல், விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணை இயேசு மன்னித்த நிகழ்வு, நற்செய்தியாக அமைந்தது. மன்னிப்பை மையப்படுத்தி, அன்று, திருத்தந்தை வழங்கிய உரையிலிருந்து சில எண்ணங்கள் இதோ:

"விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணை, இயேசு, சாவுக்குத் தீர்ப்பிட வேண்டும் என்று மறைநூல் அறிஞர்கள் விரும்பினர். அந்த மரண தண்டனையிலிருந்து இயேசு அப்பெண்ணைக் காப்பாற்றினார். அவரிடமிருந்து எந்த ஒரு கடுமையான சொல்லும் வரவில்லை; மாறாக, இரக்கம், அன்பு இவையே அவரிடமிருந்து வெளிப்பட்டன.

இறைவனின் இரக்கத்தை, பொறுமையைப் பற்றி நீங்கள் சிந்தித்தது உண்டா? அவரது பொறுமைக்கு அளவே இல்லை. இதை நாம் மறந்துவிடக் கூடாது: மன்னிப்பதில் கடவுள் சலிப்படைவதேயில்லை. மன்னிப்பு கேட்பதில் நாம்தான் சலிப்படைந்து விடுகிறோம்."

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் தலைமைப் பணிக்கெனத் தேர்ந்த விருதுவாக்கில் (miserando atque eligendo - இரக்கம் கொண்டு தேர்ந்தெடுத்து) ‘இரக்கம்’ என்ற சொல் இடம்பெற்று்ள்ளது. அதற்கேற்ப, அவர் ஆற்றிவரும் பணிகளில், இரக்கம் முதலிடம் பெற்றுள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டையும், அவரது பணிவாழ்வின் மூன்றாம் ஆண்டு நிறைவையும் கொண்டாடும் இவ்வேளையில், இறைவன், தன் இரக்கத்தால், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு நல்ல உடல் நலத்தை வழங்கவேண்டும் என்று மன்றாடுவோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.