2016-03-11 15:23:00

திருத்தந்தை : துன்புறும் குடும்பங்களுக்காகச் செபிப்போம்


மார்ச்,11,2016. மார்ச் மாதத்திற்கென திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அறிவித்துள்ள செபக்கருத்துக்கள் ஒரு காணொளி தொகுப்பாக இவ்வியாழன் மாலை வெளியிடப்பட்டுள்ளது.

இயேசு சபையினர் நடத்திவரும் செபத்தின் திருத்தூதுப் பணிக்குழு, இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டையொட்டி மேற்கொண்டுள்ள ஒரு புதிய முயற்சியாக, திருத்தந்தையின் செபக் கருத்துக்கள், ஒவ்வொரு மாதமும் காணொளி வடிவில் வெளியாகி வருகிறது.

மார்ச் மாதத்திற்கென திருத்தந்தை வெளியிட்டுள்ள செபக்கருத்து, குடும்பத்தை மையப்படுத்தி அமைந்துள்ளது.

காணொளித் தொகுப்பின் ஆரம்பத்தில், பெற்றோர் குழந்தைகளுடன் நேரம் செலவிடும் சில காட்சிகள் தோன்றி மறையும் வேளையில், திருத்தந்தையின் குரல் பின்னணியில் ஒலிக்கிறது.

மனித சமுதாயத்தின் மிக உயர்ந்த செல்வங்களில் ஒன்று, குடும்பம்; ஆயினும், அதுவே மிக எளிதில் காயப்படக்கூடியதாக விளங்குகிறது, இல்லையா? என்ற கேள்வியுடன் திருத்தந்தை, தன் சிந்தனைகளைத் துவக்குகிறார்.

பொருளாதாரம், நலக்குறைவு, அல்லது வேறு துயரங்களுக்கு குடும்பம் உட்படும்போது, குழந்தைகள், ஒரு சோகமானச் சூழலில் வளர்கின்றனர் என்று, திருத்தந்தை தொடர்ந்து பேசுகிறார்.

திருத்தந்தை இந்தக் கருத்துக்களை பேசும் வேளையில், ஒரு சிறுமி வீட்டுக்கு வெளியே அமர்ந்திருப்பதுபோலவும், அவளுக்குப் பின் காணப்படும் மூடியக் கதவுக்குப் பின்புறமிருந்து, ஒரு பெண் அடிபடுவதுபோலும், அவர் எழுப்பும் அழுகுரலும் கேட்கின்றன.

அவ்வேளையில், அங்கு வரும் ஒரு சிறுவன் அச்சிறுமியைப் பார்த்து புன்னைகைப்பதுபோலும், பின்னர், இருவரும் சேர்ந்து 'இது என் குடும்பம்' என்ற சொற்களுடன் ஒரு ஓவியம் வரைவதுபோலும் காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.

அவ்வேளையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மார்ச் மாதத்திற்கென வகுத்திருக்கும் செபக்கருத்தைக் கூறுகிறார்.

துன்புறும் குடும்பங்களுக்கு தேவையான ஆதரவு கிடைக்கவும், குழந்தைகள், நலமான, அமைதியானச் சூழலில் வளரவும் செபிப்போம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் செபக்கருத்தை வெளியிட்டுள்ளார்.

YouTube தளத்தில், 1 நிமிடம் 27 நொடிகள் நீடிக்கும் இந்தக் காணொளித் தொகுப்பு, www.thepopevideo.org என்ற பெயரில் இவ்வியாழன் மாலை வெளியாகியுள்ளது.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.