2016-03-10 16:23:00

எங்கே இரக்கம் உள்ளதோ அங்கே இறைவன் இருக்கிறார் - தியான உரை


மார்ச்,10,2016. அரசுத் துறைகளிலும், மத நிறுவனங்களிலும் சட்டங்கள் கற்களில் பதிக்கப்படும்போது, அடுத்தவர் மீது எறிவதற்கே அந்தக் கற்கள் பயன்படுகின்றன என்று, திருத்தந்தைக்கும், திருப்பீட அதிகாரிகளுக்கும் தியான உரைகளை வழங்கும் அருள்பணி எர்மேஸ் ரோன்கி அவர்கள் கூறினார்.

உரோம் நகரின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள அரிச்சா விண்ணகப் போதகர் தியான இல்லத்தில், ஆண்டு தியானம் செய்துவரும் திருத்தந்தை, மற்றும் திருப்பீட அதிகாரிகள் அனைவருக்கும், விபச்சாரத்தில் பிடிபட்டப் பெண்ணை, மறைநூல் அறிஞரும், பரிசேயரும் இயேசுவுக்கு முன் கொணர்ந்த நிகழ்வின் அடிப்படையில் தன் சிந்தனைகளை வழங்கிய அருள்பணி ரோன்கி அவர்கள் இவ்வாறு கூறினார்.

சட்டங்களை இறுகப் பற்றிக்கொள்வதால் தங்களுக்கு முழு உண்மையும் தெரிந்துவிட்டதென உணரும் மனிதர்கள், அந்த அகந்தையில் மயக்கம் கொண்டு, மற்றவர்களின் குறைகளைக் காண்பதிலேயே குறியாய் இருக்கின்றனர் என்றும், இதனாலேயே சண்டைகள் உருவாகின்றன என்றும், அருள்பணி ரோன்கி அவர்கள் எடுத்துரைத்தார்.

ஒவ்வொரு யுகத்திலும் வாழும் பரிசேயர்கள், கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே உள்ள உறவில், பாவத்தை மையத்தில் கொணர்கின்றனர் என்பதை வருத்தத்துடன் சுட்டிக்காட்டிய அருள்பணி ரோன்கி அவர்கள், இத்தகைய மனநிலையால், மனிதர்களை கடவுளுக்கு எதிர் முனையில் வைத்து விடுகின்றனர் என்று கூறினார்.

எங்கே இரக்கம் உள்ளதோ அங்கே இறைவன் இருக்கிறார் என்று புனித அம்புரோஸ் கூறிய வார்த்தைகளை நினைவுறுத்திய அருள்பணி ரோன்கி அவர்கள், இரக்கம் இல்லாத இடத்தில், இறைவனுக்கு பணியாற்றுவதாகச் சொல்லும் ஊழியர்கள் இருப்பர், ஆனால், அங்கு இறைவன் இருக்க மாட்டார் என்பதையும் வலியுறுத்திக் கூறினார்.

'பாவம் இல்லாதவர் முதல் கல்லை எறியட்டும்' என்று இயேசு கூறியது, நாம் அனைவருமே பாவிகள் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது என்று தன் தியான உரையில் எடுத்துரைத்தார் அருள்பணி ரோன்கி.

அத்துடன், புறக்கணிக்கப்பட்ட கற்களைக் குறித்தும் நாம் சிந்திக்க அழைக்கப்பட்டுள்ளோம் என்று கூறிய அருள்பணி ரோன்கி அவர்கள், சமுதாயம் என்ற கட்டடத்தில் வலுவிழந்தோர் பலர் புறக்கணிக்கப்பட்ட கற்களாக இருப்பதைக் காண்பதற்கு சரியான கண்ணோட்டம் நமக்கு வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

நல்லவர், பொல்லாதவர், நன்மை, தீமை, குற்றம் தூய்மை என்ற பிரிவுகளை, தன் இரக்கத்தாலும், மன்னிப்பினாலும் தகர்த்துவிடும் இயேசு, இத்தகைய நன்னெறிப் பிரிவுகளைத் தாண்டி, புதிய வழியில் செல்ல நம் அனைவரையும் அழைக்கிறார் என்று, அருள்பணி ரோன்கி அவர்கள், தன் சிந்தனைகளை நிறைவு செய்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.