2016-03-09 16:00:00

உலக மகளிர் நாளன்று இந்தியப் பெண்களின் போராட்டங்கள்


மார்ச்,09,2016. உணவு பாதுகாப்பு, தாய்மைப் பேறுகால வசதிகள், மற்றும் பாராளுமன்றத்தில் பெண்களுக்கு தனியிடங்கள் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து, உலக மகளிர் நாளன்று இந்தியாவில் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இந்தியாவின் கொல்கத்தா மாநகரில், இயேசு சபையினர் நடத்திவரும் உதயானி (Udyayani) என்ற அமைப்பின் உதவியுடன், 3000த்திற்கும் அதிகமான பெண்கள், மொஹாப்பூர் என்ற கிராமத்தில் போராட்டங்களை மேற்கொண்டனர்.

பெண்களுக்கு, குறிப்பாக, கிராமங்களில் வாழும் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளை எடுத்துச் சொல்லும் இந்தப் போராட்டத்தின் கோரிக்கைகள் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்படும் என்று, உதயானி அமைப்பின் இயக்குனர் அருள்பணி இருதய ஜோதி அவர்கள் UCAN செய்தியிடம் கூறினார்.

உலக மகளிர் நாளையொட்டி, பெண்களுக்கு இந்திய பாராளுமன்றத்தில் தனியிடங்கள் ஒதுக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையுடன் புது டில்லியில் மற்றொரு பெண்கள் அணிவகுப்பு நடைபெற்றது என்று UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.