2016-03-09 10:16:00

அன்னை தெரேசா சபைக்கு இந்திய ஆயர்கள் அனுதாபம்


மார்ச்,08,2016. ஏமனில், கடந்த வெள்ளிக்கிழமையன்று, அருளாளர் அன்னை தெரேசா அவர்கள் சபையைச் சார்ந்த நான்கு அருள்சகோதரிகள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு, தங்களின் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ள அதேவேளை, அச்சபையினருக்குத் தங்களின் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளனர் இந்திய ஆயர்கள்.

பெங்களூருவில் 32வது நிறையமர்வுக் கூட்டத்தை நடத்திவரும் 180 ஆயர்கள் வெளியிட்ட கண்டன அறிக்கையில், கிறிஸ்தவ மறைப்பணியாளர்கள் மீது, தீய மனத்தவரால் நடத்தப்பட்டிருக்கும் இந்தக் கொடூரத் தாக்குதல்கள், ஏழைகள் மற்றும் நோயுற்றவர்க்குப் பணியாற்றும் அர்ப்பணத்தை சோர்வடையச் செய்யாது என்று கூறியுள்ளனர்.

இத்தாக்குதல் நடந்த அதேநாளில், கடத்தப்பட்டுள்ள இந்திய சலேசிய சபை அருள்பணியாளர் Tom Uzhunnalil அவர்கள் நிலை குறித்து கவலை தெரிவித்துள்ள இந்திய ஆயர்கள், அந்த அருள்பணியாளர் உடனடியாக விடுதலை செய்யப்படுமாறு விண்ணப்பித்துள்ளனர்.

மேலும், இக்கூட்டத்தில், இந்திய ஆயர்கள் பேரவையின் 14 ஆணைக் குழுக்கள் மற்றும் ஆறு தேசிய மையங்களிலிருந்து அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. அண்மையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாடு, பாண்டிச்சேரி, ஜம்மு-காஷ்மீர் போன்ற பகுதிகளுக்குக் காரித்தாஸ் நிறுவனம் ஆற்றிய பணிகள் மற்றும் உதவிகள் குறித்த அறிக்கைகள்  சமர்ப்பிக்கப்பட்டன.

மார்ச்,09, இப்புதனன்று நிறைவடையும் இந்திய ஆயர்கள் கூட்டம், “இக்காலச் சவால்களுக்கு இந்தியத் திருஅவையின் பதில்” என்ற தலைப்பில் நடைபெறுகிறது. 

ஆதாரம் : CBCI / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.