2016-03-07 15:23:00

பிறரன்பின் மறைசாட்சிகள், புறக்கணிப்பின் பலிகடாக்கள்


மார்ச்,07,2016. கடந்த வெள்ளிக்கிழமையன்று ஏமனில் சுட்டுக்கொல்லப்பட்ட, அருளாளர் அன்னை தெரேசா அவர்கள் சபையைச் சார்ந்த நான்கு அருள்சகோதரிகள், நவீன கால மறைசாட்சிகள் மற்றும் புறக்கணிப்புக்குப் பலியானவர்கள் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஞாயிறு மூவேளை செப உரைக்குப் பின்னர் கூறினார்.

அருளாளர் அன்னை தெரேசா அவர்கள் ஆரம்பித்த பிறரன்பு மறைப்பணியாளர்கள் சபையின் இந்த நான்கு அருள்சகோதரிகளுடன், அன்னை தெரேசா, விண்ணில் இணைந்து கொள்வாராக என்று செபித்த திருத்தந்தை, இச்சபையினருடன் தனது ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்தார்.

இந்த அருள்சகோதரிகள் திருஅவைக்காகத் தங்கள் குருதியைச் சிந்தியவர்கள், தங்களைத் தாக்கியவர்களுக்கு மட்டுமல்ல, உலகளாவிய புறக்கணிப்புக்கும் இவர்கள் பலியானவர்கள் என்றும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மார்ச் 4, கடந்த வெள்ளியன்று ஏடன் நகரில் துப்பாக்கி மனிதர்கள் சுட்டுக் கொன்ற இந்த அருள்சகோதரிகள், அந்நகரின் வயதானவர்கள் இல்லத்தில் பணியாற்றியவர்கள். இவர்களைத் தவிர மேலும் 12 பேர் அவ்வில்லத்தில் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.