2016-03-07 15:40:00

இரக்கமுள்ள, கனிவுள்ள இறையன்பு நமக்காகக் காத்திருக்கிறது


மார்ச்,07,2016. நாம் நாமாகவே நன்றாகத்தான் இருக்கிறோம் என்ற எண்ணத்தில், தம்மிடமிருந்து விலகிச் சென்றபோதும், இரக்கமுள்ள நம் வானகத் தந்தை, நாம் திரும்பி வருவதற்காகக் காத்திருக்கிறார் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஞாயிறு மூவேளை செப உரையில் கூறினார்.

காணாமற்போன மகன் உவமை குறித்த சிந்தனைகளை வழங்கிய திருத்தந்தை,  இறைவனின்றி நம்மால் எல்லாம் செய்ய முடியும் என்ற எண்ணத்தில், அவரைவிட்டுத் தூரச் சென்றாலும், நாம் திரும்பி வருவதற்காக, இறையன்பு காத்திருக்கின்றது  என்றும் கூறினார்.

லூக்கா நற்செய்தியிலுள்ள இந்த உவமையில் சொல்லப்பட்டுள்ள தந்தை உருவகம், இறைவனின் இதயத்தை வெளிப்படுத்துகின்றது என்றும், இரக்கமுள்ள வானகத் தந்தை, எல்லாவற்றையும் கடந்து, இயேசுவில் நம்மை அன்புகூர்கிறார் என்றும், நாம் ஒவ்வொரு முறையும் தவறிழைக்கும்போது, நம் மனம்மாற்றத்திற்காக இறைவன் காத்திருக்கிறார் என்றும் திருத்தந்தை கூறினார்.

ஒப்புரவு அருளடையாளத்தில் நாம் நம் புதுவாழ்வைத் தொடங்கலாம் என்று நினைவுபடுத்தியத் திருத்தந்தை, தம் பிள்ளைகள் என்ற மாண்பை நமக்களித்து, நம்மை வரவேற்று, ‘எழுந்து, அமைதியுடன் முன்னோக்கிச் செல்’ என்று இறைவன் உரைக்கிறார் என்றும் கூறினார்.

இந்த உவமையில், இறைவன் நம்மை மன்னிப்பதற்கு எப்போதும் தயாராக இருக்கிறார் என்பது வெளிப்படுத்தப்படுகின்றது என்றும், சுதந்திரம் என்ற பெரிய கொடையை இறைவன் தந்திருக்கிறார் என்றும் ஞாயிறு மூவேளை செப உரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.