2016-03-05 16:06:00

முன்னணி சுற்றுச்சூழல் ஆர்வலர் Cáceres படுகொலை, கண்டனங்கள்


மார்ச்,05,2016. மத்திய அமெரிக்க நாடான கொண்டூராசில், பூர்வீக மக்களின் நில உரிமைக்காகப் போராடி வந்த முன்னணி சுற்றுச்சூழல் ஆர்வலர் Berta Cáceres அவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளது குறித்து ஐ.நா. மற்றும் உலகளாவிய அரசு-சாரா நிறுவனங்கள் தங்களின் கடும் கண்டனங்களை வெளியிட்டுள்ளன.

கொண்டூராஸ் அரசு, உடனடியாகச் செயல்பட்டு, கொலைகாரர்களைக் கண்டுபிடிக்குமாறும், கொலைசெய்யப்பட்டவரின் குடும்பத்திற்குப் பாதுகாப்பு அளிக்குமாறும் அரசு-சாரா நிறுவனங்கள் வலியுறுத்தியுள்ளன.

கொலைகாரர்கள், Berta Cáceres அவர்களின் வீட்டை உடைத்து உள்ளே சென்று  படுகொலை செய்துள்ளனர், ஆனால், திருடுவதற்காக இவர்கள் வீட்டில் நுழைந்தனர் என்று காவல்துறை கூறுவதாக ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.

கடந்த பத்து ஆண்டுகளாக மரண அச்சுறுத்தல்களைப் பெற்றுவந்த Berta Cáceres அவர்கள், தான் ஆரம்பித்த கொண்டூராஸ் பூர்வீக மக்கள் அவை (COPINH) வழியாக, அம்மக்களின் உரிமைகளுக்காகப் போராடி வந்தார்.

2014ம் ஆண்டு அக்டோபரில், வத்திக்கானில் உலகளாவிய சுற்றுச்சூழல் இயக்கங்களின் உறுப்பினர்களைத் திருத்தந்தை சந்தித்தபோது, அதில் பங்கு கொண்டவர் Berta Cáceres.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.