2016-03-05 15:09:00

திருத்தந்தை-ஏமனில் முதியோர் இல்லத் தாக்குதல் பேய்த்தனமானது


மார்ச்,05,2016. ஏமன் நாட்டில் அருளாளர் அன்னை தெரேசா சபையினர் நடத்திவரும் முதியோர் இல்லம் ஒன்றில், இவ்வெள்ளியன்று நடத்தப்பட்ட கடும் பயங்கரவாதத் தாக்குதலில், அச்சபையின் நான்கு அருள்சகோதரிகள் உட்பட 16 பேர் கொல்லப்பட்டது குறித்த தனது அதிர்ச்சியையும், ஆழ்ந்த வருத்தத்தையும், கடும் கண்டனத்தையும் வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஏமனின் ஏடன் நகரில், அன்னை தெரேசா அவர்கள் ஆரம்பித்த பிறரன்பு மறைப்பணியாளர் சபையினர், வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குப் பணியாற்றிவந்த முதியோர் இல்லத்தில், துப்பாக்கியுடன் நுழைந்த மனிதர்கள் கண்மூடித்தனமாக நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட நான்கு அருள்சகோதரிகளுள் ஒருவர் இந்தியர், இருவர் ருவாண்டா நாட்டவர், மற்றொருவர் கென்ய நாட்டவர்.

ஏமனில், கடவுளின் பெயரால் தொடர்ந்து போரிட்டுவரும் அனைவரும் ஆயுதங்களைக் கைவிட்டு, உரையாடலின் பாதையில் நடக்குமாறு விண்ணப்பித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த அறிவற்ற மற்றும் பேய்த்தனமான வெறியாட்ட வன்முறையில் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்துள்ளவர்களின் குடும்பங்களுக்குத் தனது செபத்தையும், ஒருமைப்பாட்டுணர்வையும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை.

அர்த்தமற்ற இந்தக் கொலைகள், மனசாட்சிகளைத் தட்டியெழுப்பி, இதயத்தின் மனம் மாற்றத்திற்கு இட்டுச் செல்லவும், போரிடும் எல்லாத் தரப்பினரும் ஆயுதங்களைக் கைவிட்டு, வன்முறையைப் புறக்கணித்து, உரையாடலின் பாதையைத் தொடரவும்,  தான் செபிப்பதாகவும் கூறியுள்ளார் திருத்தந்தை.

இத்தாக்குதல் குறித்த கண்டனச் செய்தியை, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், திருத்தந்தையின் பெயரில் வெளியிட்டுள்ளார்.

ஏடன் நகரில் முதியோர் இல்லத்தை 2 பயங்கரவாதிகள் சுற்றி வளைக்க, 4 பயங்கரவாதிகள் துப்பாக்கியுடன் இல்லத்திற்குள் புகுந்தனர். அவர்கள் கண்மூடித்தனமாக நடத்திய தாக்குதலில் 16 பேர் பலியாகி உள்ளனர். முதியோர் இல்லத்தின் பாதுகாவலரைச் சுட்டுக் கொன்ற பயங்கரவாதிகள், பின்னர் இல்லத்துக்குள் நுழைந்து, முதியோர்களைக் கையைக் கட்டி, நிறுத்தி துப்பாக்கியால் சுட்டுக் கொடூரமாக கொலை செய்துள்ளனர். இத்தாக்குதலில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.