2016-03-05 14:26:00

தவக்காலம் 4ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை


தவக்காலத்தின் 4ம் ஞாயிறை, Laetare Sunday - அதாவது, 'மகிழும் ஞாயிறு' என்று கொண்டாடுகிறோம். வாழ்வின் ஒவ்வொரு நாளும் மகிழ்வில் நிறைந்திருந்தால் நன்றாக இருக்கும் என்ற ஏக்கமும், கனவும் நம் ஒவ்வொருவரிடமும் உள்ளது. ஆனால், மனிதராய் பிறந்த நமக்கு இது சாத்தியமல்ல. துன்பமும், இன்பமும், மகிழ்வும், மனமுடைதலும் மாறி, மாறி வருவதுதான் மனித வாழ்க்கை. நம்மைத் துயரத்தில் ஆழ்த்தும் பெரும்பாலான விடயங்கள், உறவுகளை மையப்படுத்தியவை என்பதும் நாம் அறிந்த உண்மை. உறவை மையப்படுத்தி சொல்லப்பட்டுள்ள 'காணாமற்போன மகன் உவமை' இன்றைய நற்செய்தியாகத் தரப்பட்டுள்ளது.

இந்த உவமையால் தூண்டப்பட்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தவக்காலத்தின் 4ம் ஞாயிறுக்கு முந்திய இரு நாட்களை, 'மன்னிப்பின் விழா'வெனக் கொண்டாடுமாறு, ஈராண்டுகளுக்கு முன் அழைப்பு விடுத்தார். கடந்த ஈராண்டுகளாக பொருளுள்ள முறையில் நடைபெற்ற இவ்விழா, இவ்வெள்ளி, சனி ஆகிய இருநாட்கள் கத்தோலிக்க உலகெங்கும் கொண்டாடப்பட்டது.

'மன்னிப்பின் விழா'வை அறிமுகம் செய்து வைத்தபோது, திருத்தந்தை கூறிய சொற்கள் இதோ: "வெள்ளி, சனி ஆகிய இரு நாட்களில், 'ஆண்டவருக்கென 24 மணி நேரத்'தை ஒதுக்கி, நாம் மனமாற்றத்திற்கான சிறப்பு நேரமாக அதைச் செலவிடுவோம். இதை நாம் 'மன்னிப்பின் விழா' என்று கொண்டாடுவோம். காணாமற்போன மகன் திரும்பிவந்தபோது, அதை ஒரு விழாவாகக் கொண்டாடியத் தந்தையைப்போல, ஆண்டவர் நமக்கு வழங்கியுள்ள மன்னிப்பை நாம் கொண்டாடவேண்டும்" என்று இவ்விழாவிற்கு அழைப்பிதழ் அனுப்பினார் திருத்தந்தை.

இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டைக் கொண்டாடிவரும் திருஅவையில், இவ்வாண்டு சிறப்பிக்கப்படும் 'மன்னிப்பின் விழா', இரக்கத்தில் தோய்ந்த நாள் என்றும் கொண்டாடப்படுகிறது. மன்னிப்பின் விழாவையும், மகிழும் ஞாயிறையும் கொண்டாட, 'காணமற்போன மகன்' உவமையை, தாய் திருஅவை நமக்கு வழங்கியுள்ளார். 'இரக்கத்தின் நற்செய்தி' என்ற அடைமொழிக்குப் பொருத்தமாக விளங்கும் லூக்கா நற்செய்தியின் 15ம் பிரிவு, "நற்செய்திக்குள் ஒரு நற்செய்தி" என்று அழைக்கப்படுகிறது. இதற்கு முக்கியக் காரணம், இங்கு கூறப்பட்டுள்ள காணாமற்போன ஆடு, காணமற்போன நாணயம், காணமற்போன மகன் என்ற மூன்று உவமைகள். இவற்றில், காணாமற்போன மகன் உவமை, திருஅவை என்ற எல்லையைத் தாண்டி, உலகினர் கவனத்தை ஈர்த்த ஓர் உவமை.

'காணாமற்போன மகன்' உவமை, பொதுவாக, 'ஊதாரி மகன்' உவமை என்றும் அழைக்கப்படுகிறது. இந்த உவமையை, 'ஊதாரி மகன்' உவமை என்று சொல்வதற்குப் பதில், 'ஊதாரித் தந்தை' உவமை என்று சொல்வதே பொருத்தமாகத் தெரிகிறது. பின்  விளைவுகளை பற்றி சிந்திக்காமல், வருங்காலத்திற்குச் சேமித்து வைப்பதைப்பற்றி யோசிக்காமல், வீண் செலவு செய்யும் ஒருவரைத்தான் ஊதாரி என்று கூறுகிறோம்.

தனக்கு கிடைத்த சொத்தை, தாறுமாறாய் செலவு செய்த இளையமகன், ஊதாரிதான். அதேபோல், வயது முதிர்ந்த காலத்தில், தன் பாதுகாப்பிற்கென எதையும் வைத்துக்கொள்ளாமல், 'தன் சொத்தைப் பகிர்ந்தளித்த' (லூக்கா 15: 12) தந்தையும் ஊதாரிதானே! திரும்பி வந்த மகனை எவ்வித நிபந்தனையுமின்றி ஏற்றுக்கொண்டது மட்டுமல்லாமல்,  தலைகால் புரியாமல் அவன் மீது அன்பு காட்டும் தந்தை ஒரு ஊதாரி தானே! மனம் திருந்தி வந்த மகன், மன்னிப்புக் கேட்பதற்கு முயற்சி செய்தபோது, அதை இடைமறித்து, ஒரு விழாவைத் துவக்கிவைத்த தந்தையை, 'ஊதாரி தந்தை' என்று அழைக்காமல், வேறு எவ்விதம் அழைப்பது?

ஜப்பான் நாட்டில் பணியாற்றிவரும் அருள்பணி வில்லியம் கிரிம் (William Grimm) அவர்கள், ஞாயிறு மறையுரைகளை வலைத்தளத்தில் வழங்கி வருபவர். இந்த ஞாயிறுக்கென அவர் வழங்கியுள்ள மறையுரையில், 'ஊதாரித் தந்தை' உவமையை, புதியக் கோணத்தில் சிந்திக்கத் தூண்டுகிறார்.

தந்தையின் ‘ஊதாரித்தனம்’ அவர் காட்டிய மன்னிப்பில் வெளிப்படுகிறது என்று, அருள்பணி கிரிம் அவர்கள் கூறியுள்ளார். வீட்டைவிட்டு வெளியேறிய இளைய மகனை, தந்தை எப்போது மன்னித்தார்? என்ற கேள்வியை, எழுப்பி, அதற்கு, பின்வருமாறு அவர் விடையளிக்கிறார்:

இளையமகன் வேறொரு நாட்டில் பசியால் துடித்தபோது, தந்தை அவரை மன்னித்தாரா? இல்லை. தன் மகனுக்கு என்ன நேரந்ததேன்று தெரியாமல் அவர் தவித்தாரே தவிர, அந்நேரத்தில் அவர் மன்னிக்கவில்லை.

பசியால் துடித்த மகன், மறுபடியும் தன் தந்தையின் இல்லத்திற்குச் செல்வேன் என்று தீர்மானித்தபோது, அவருக்கு மன்னிப்பு கிடைத்ததா? இல்லை.

தந்தையிடம் திரும்பிவந்து, தன் குற்றங்களைக் கூறியபோது, மகன் மன்னிக்கப்பட்டாரா? இல்லை. மகன் சொல்லவந்ததை, தந்தை, செவிமடுத்தாகவே தெரியவில்லையே. விருந்துக்கு ஏற்பாடு செய்வதிலேயே அவரது முழு கவனமும் இருந்ததே தவிர, மன்னிப்பைப் பற்றி அவர் கவலைப்பட்டதாகவேத் தெரியவில்லை.

அவ்வாறெனில், எப்போது மன்னிப்பு வழங்கப்பட்டது?

இளைய மகன் வீட்டைவிட்டு வெளியேறியபோதே அவருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டுவிட்டது. அவரோடு சேர்ந்து, தந்தையும் வீட்டைவிட்டு வெளியேறி, வாசலிலேயே காத்துக் கிடந்தாரே! தன் சொத்தை மட்டுமல்லாமல், மன்னிப்பையும் வாரி வழங்கிய ஊதாரித் தந்தையின் உச்சநிலை பாசம் அதுதான்!

பாவம் ஒன்று நிகழும் வேளையிலேயே, மனம் பதைபதைத்து, மன்னிப்பை வழங்க விரைந்து வருபவர், நம் விண்ணகத் தந்தை என்பதை, இயேசு இவ்வுவமையில் சித்திரிக்கிறார்.

மன்னிப்பு வழங்குவதில் மனம் தளராத விண்ணகத் தந்தையைக் குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அடிக்கடி சொல்லிவரும் கருத்து இதோ: "மன்னிப்பு வழங்குவதில் தந்தையாம் இறைவன் எப்போதும் சலிப்படைவதே இல்லை. மன்னிப்பு கேட்பதில், நாம்தான் சலிப்படைந்துவிடுகிறோம். எனவே, சலிப்பின்றி நம் தந்தையை அணுகிச் செல்லத் துணிவோம்" என்று திருத்தந்தை அடிக்கடி கூறி வருகிறார்.

‘காணாமற்போன மகன்’ உவமையை இன்றையச் சூழலில் பொருத்திப் பார்க்கும்போது, நெருடலான பலப் பிரச்சனைகள் நெஞ்சைச் சுடுகின்றன. இப்பிரச்சனைகளில் ஒன்றை வெளிச்சம்போட்டு காட்ட ஒரு சிறுகதை உதவும். இலக்கியத்தில் நொபெல் பரிசு வென்ற அமெரிக்க எழுத்தாளர் Ernest Hemingway அவர்கள் எழுதிய ‘The Capital of the World’ என்ற சிறுகதையில், இடம்பெறும் ஒரு நிகழ்வு இது:

ஸ்பெயின் நாட்டில் வாழ்ந்த தந்தை ஒருவருக்கும், ‘பாக்கோ’ (Paco) என்ற அவரது 'டீன் ஏஜ்' மகனுக்கும் இடையே உறவு முறிந்தது. வீட்டைவிட்டு வெளியேறிய  பாக்கோவைத்  தேடி அலைந்தார் தந்தை. இறுதியில், அவர் ஸ்பெயின் நாட்டின் தலைநகரான மத்ரித் சென்று தேடினார். பல நாட்கள் தேடியபின், ஒருநாள் செய்தித்தாளில் விளம்பரம் ஒன்று வெளியிட்டார்: “Paco, meet me at the Hotel Montana. Noon Tuesday. All is forgiven. Papa” "பாக்கோ, மொன்டானா ஹோட்டலில் என்னைச் சந்திக்க வா. உனக்காக நான் செவ்வாய் மதியம் அங்கு காத்திருப்பேன். அனைத்தும் மன்னிக்கப்பட்டுவிட்டன. இப்படிக்கு, அப்பா" என்ற வார்த்தைகள், அவ்விளம்பரத்தில் காணப்பட்டன. செவ்வாய் மதியம் மொன்டானா ஹோட்டலுக்குச் சென்ற அப்பாவுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. 800க்கும் அதிகமான இளையோர் ஹோட்டலுக்கு முன் திரண்டிருந்ததால், கூட்டத்தைக் கட்டுபடுத்த காவல்துறை வரவழைக்கப்பட்டது.

‘பாக்கோ’ (Paco) என்பது, ஸ்பெயின் நாட்டில் பலரும் பயன்படுத்தும் ஒரு செல்லப்பெயர். அங்கு வந்திருந்த அனைவருமே பாக்கோ என்ற பெயர் கொண்டவர்கள். அதுமட்டுமல்ல, அவர்கள் அனைவருமே அப்பாவுடன் ஏற்பட்ட மோதலில் வீட்டைவிட்டு வெளியேறியவர்கள். அவர்கள் அனைவரும் தங்கள் தந்தையை எதிர்பார்த்து, அங்கு காத்திருந்தனர் என்று, Hemingway அவர்கள் தன் சிறுகதையை முடித்துள்ளார்.

இக்கதைக்கு பெரிய விளக்கங்கள் தேவையில்லை. இன்றும், நமது குடும்பங்களில் நிகழும் உறவுப் பிரச்சனைகளால் நகரங்களில் தொலைந்துபோகும் எத்தனையோ இளையோரைக் குறித்து நாம் நன்கு அறிவோம். குடும்பங்களில் ஏற்படும் உறவு முறிவுகளால், வீட்டில் இருந்தவண்ணம், அல்லது வீட்டைவிட்டு வெளியேறி காணாமற்போகும் மகன், மகள், பெற்றோர், கணவன், மனைவி, வயதான தாத்தா, பாட்டி என்று... இந்தப் பட்டியல் மிக நீளமானது. தவக்காலம் ஒப்புரவின் காலம். இரக்கத்தின் யூபிலி ஆண்டில் நாம் கடைபிடிக்கும் தவக்காலம், இந்த உறவு முறிவுகளைக் குணமாக்க தகுந்ததொரு காலம்.

உறவு முறிவு மட்டுமே ஒருவர் காணாமற் போவதற்குக் காரணமல்ல என்பதை நமது ஊடகங்கள் தினமும் நமக்கு உணர்த்திவருகின்றன. இலங்கை உள்நாட்டுப் போரினால் காணமற்போனோரை, உறவினர்கள் தேடி அலைந்து கொண்டிருக்கின்றனர் என்பது, அண்மைய ஆண்டுகளில், ஊடகத்தில் நாம் அடிக்கடி வாசிக்கும் ஒரு செய்திதானே!

போர்ச்சூழல், கடத்தல் போன்ற கொடிய காரணங்கள் ஏதுமின்றி, காணமற்போகும் பலரும் உண்டு. சில ஆண்டுகளுக்கு முன், ஊடகத்தில் வந்த மற்றொரு செய்தி இது: "சிவம் சிங் (Shivam Singh) என்ற 13 வயது சிறுவன், மாலையில் வீட்டுப்பாடம் செய்து கொண்டிருந்தான். திடீரென எழுந்து, ‘அம்மா, நான் கடைக்குப் போய் மிட்டாய் வாங்கிட்டு வந்து, பிறகு வீட்டுப்பாடம் செய்கிறேன்’ என்று கூறியபடி, தாயின் அனுமதிக்குக் கூடக் காத்திருக்காமல் போனவன்தான்... இன்னும் திரும்பவில்லை. இது நடந்து ஆறு மாதங்கள் ஆகிவிட்டன. சிவம் சிங் திறந்தபடியே விட்டுச்சென்ற பாடப் புத்தகங்களை அதே இடத்தில் காத்து வருகின்றனர் பெற்றோர். அப்புத்தகங்களைப் பார்க்கும்போதெல்லாம் அவர்கள் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது" என்று அச்செய்தியில் கூறப்பட்டிருந்தது.

சிவம் கடைக்குப் போன வழியில் ஒரு விபத்தில் தன் உயிரை இழந்தான் என்ற செய்தியை இந்தப் பெற்றோர் கேட்டிருந்தாலும் பரவாயில்லையோ என்று எண்ணத் தோன்றுகிறது. மரணம் ஒரு பயங்கர இழப்பு என்றாலும், மகனுக்கு என்ன ஆயிற்று என்பதையாவது அந்தப் பெற்றோர் அறிந்திருப்பர். இப்போதோ, எவ்விதத் தகவலும் இல்லாமல், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அந்த இளம் பெற்றோர் அனுபவிக்கும் நரக வேதனை மிகக் கொடியது.

ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவில் மட்டும் 50,000க்கும் அதிகமான குழந்தைகள் எவ்விதத் தடயமும் இன்றி காணாமல் போகின்றனர் என்றும், இவர்களில் பெரும்பாலானோர் பெண் குழந்தைகள் என்றும் கேள்விப்படுகிறோம். ஐ.நா. மனித உரிமைகள் அவைக் கூட்டத்தில் அதிர்ச்சி தரும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு தகவலின்படி, பாலியல் வர்த்தகத்திற்கென பல இலட்சம் சிறுமியரையும், இளம் பெண்களையும் கடத்தி, விலை பேசும் கும்பல்கள், 136 நாடுகளில் உள்ளன என்று தெரியவந்துள்ளது. இவை வெறும் எண்ணிக்கைகள் அல்ல. காணாமற்போன ஒவ்வொரு பெண்ணும் ஏதோ ஒரு குடும்பத்தில் வேதனை நிறைந்த வெற்றிடத்தை உருவாக்கியுள்ளனர் என்பதே உண்மை.

மார்ச் 8, வருகிற செவ்வாயன்று மகளிர் உலக நாளைச் சிறப்பிக்கவிருக்கிறோம். பிறப்பிலிருந்து பல்வேறு உரிமைகள் மறுக்கப்பட்டு, மனித சமுதாயம் என்ற காட்டில் காணாமற்போகும் பெண்களை இறைவனின் திருமுன் கொணர்வோம். பாகிஸ்தானில், பெண்களின் கல்வி உரிமைக்காகப் போராடிய இளம்பெண் மலாலா யூசுப்சாய் (Malala Yousafzai) அவர்களைத் தெரியாவதவர்கள் இருக்கமுடியாது. அடிப்படைவாதிகளால் குண்டடிபட்டும், இன்று, உலக அரங்கில் தலைநிமிர்ந்து வாழும் இந்த இளம்பெண், தன்னைப் பற்றி கூறிய அற்புதச் சொற்களுடன் நம் சிந்தனைகளை நிறைவு செய்வோம்:

I don't want to be remembered as the girl who was shot. I want to be remembered as the girl who stood up. அதாவது, "குண்டடிபட்ட பெண் என்று நினைவுகூரப்படுவதை நான் விரும்பவில்லை. எழுந்து நின்ற பெண் என்று நினைவுகூரப்படுவதையே நான் விரும்புகிறேன்" என்பன, இளம்பெண் மலாலா அவர்களின் நம்பிக்கையூட்டும் சொற்கள்.

காணாமற்போன மகனைவிட, திரும்பிவந்த மகனே உலக மக்களின் உள்ளங்களில் வாழ்கிறார். அதேபோல், இவ்வுலகில் நசுக்கப்பட்டு காணாமற்போகும் பெண்கள், மீண்டும் எழுந்து நிற்பதை உலக மகளிர் நாளன்று கொண்டாடுவோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.