2016-03-05 15:50:00

கத்தோலிக்கரின் எண்ணிக்கை 14.1 விழுக்காடு அதிகரிப்பு


மார்ச்,05,2016. கடந்த ஒன்பது ஆண்டுகளில் உலகில் திருமுழுக்குப் பெற்ற கத்தோலிக்கரின் எண்ணிக்கை 14.1 விழுக்காடு அதிகரித்துள்ளது, அதே காலத்தில், உலக மக்கள் தொகை 10.8 விழுக்காடு அதிகரித்துள்ளது என்று, Annuario Pontificio 2016ல் கூறப்பட்டுள்ளது. 

இந்நாள்களில் விற்பனைக்கு வந்துள்ள, Annuario Pontificio என்ற கத்தோலிக்கத் திருஅவையின் புள்ளி விபரங்கள் அடங்கிய 2016ம் ஆண்டு குறிப்பேட்டில், உலகில் திருமுழுக்குப் பெற்ற கத்தோலிக்கரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

உலக மக்கள் தொகையில் அறுபது விழுக்காட்டினரைக் கொண்ட ஆசியாவில், 2014ம் ஆண்டில் கத்தோலிக்கரின் எண்ணிக்கை 11 விழுக்காடு என்றும், 2005க்கும், 2014ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், உலக அளவில் ஆயர்களின் எண்ணிக்கை 8.2 விழுக்காடு அதிகரித்து, இவ்வெண்ணிக்கை, 4,841 லிருந்து, 5,237 ஆக உயர்ந்துள்ளது என்றும் அந்த ஏடு கூறுகிறது.

2014ம் ஆண்டு வரை அறிவிக்கப்பட்டுள்ள இந்தப் புள்ளி விபரங்களில், இவ்வுலகில், 2,998 திருஆட்சிப்பீடங்கள் உள்ளன என்றும், 2015ம் ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி முதல், டிசம்பர் 31ம் தேதி வரை, மூன்று புதிய மறைமாவட்டங்கள், மூன்று திருஆட்சிப்பீடங்கள் மற்றும் 2 அப்போஸ்தலிக்க திருஆட்சிப்பீடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்று அதில் உள்ளது.

2005க்கும், 2014ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், மறைமாவட்ட மற்றும் துறவற அருள்பணியாளர்களின் எண்ணிக்கை 4,06,411 லிருந்து 4,15,792 ஆக உயர்ந்துள்ளது, இது ஆப்ரிக்காவில் 32.6 விழுக்காடு, ஆசியாவில் 27.1 விழுக்காடு என அதிகரித்துள்ளது, மேலும், இதே கால இடைவெளியில், அருள்சகோதரர்கள் 54,559, அருள்சகோதரிகள் 6,83,000 என்ற அளவில் இருந்தனர் என்றும் அவ்வேடு கூறுகிறது.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.