2016-03-04 16:26:00

திருத்தந்தையின் பாகிஸ்தான் திருத்தூதுப் பயணம்


மார்ச்,04,2016. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாகிஸ்தான் நாட்டுக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டால், பல ஆண்டுகளாகப் பயங்கரவாதத்தை எதிர்கொண்டுவரும் பாகிஸ்தான் மக்கள் மீது ஒருமைப்பாட்டுணர்வைக் காட்டுவதாகவும், அம்மக்களை ஊக்கப்படுத்துவதாகவும் அப்பயணம் அமையும் என்று அந்நாட்டு ஆயர் ஒருவர் கூறினார்.

பாகிஸ்தானுக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ள வேண்டுமென்று, அந்நாட்டு அரசு முன்வைத்த வேண்டுகோளை, திருத்தந்தை ஏற்றுக்கொண்டார் என்று, பாகிஸ்தான் அரசு அறிக்கை வெளியிட்டிருப்பது குறித்து கருத்து தெரிவித்த, Faisalabad ஆயர் Joseph Arshad அவர்கள் இவ்வாறு கூறினார்.

திருத்தந்தை ஒரு நாட்டுக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொள்வதாய் இருந்தால், முதலில் வத்திக்கானிலிருந்து ஒரு குழு அந்நாட்டைப் பார்வையிடும், இதற்கு நிறையத் தயாரிப்புகள் இருக்கின்றன, இது குறித்து, உரோமையிலிருந்து எழுத்துவடிவில் எந்தத் தகவலையும் தாங்கள் பெறவில்லை என்று மேலும் கூறினார் ஆயர் Arshad.

அப்படி திருத்தந்தை திருத்தூதுப் பயணம் மேற்கொள்வதாய் இருந்தாலும், இந்த ஆண்டில் அது நடைபெறுவதற்குச் சாத்தியமில்லை என்றுரைத்த ஆயர் Arshad அவர்கள்,  பாகிஸ்தானின் சிறுபான்மைக் கிறிஸ்தவர்கள் இவ்வாண்டில் திருத்தந்தையைப் பார்ப்பார்களா என்பது சந்தேகமே என்றும் கூறினார்.

ஏறக்குறைய 20 கோடி மக்களைக் கொண்ட பாகிஸ்தானில் 97 விழுக்காட்டினர் முஸ்லிம்கள். கத்தோலிக்கர் பத்து இலட்சத்திற்கும் குறைவே.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.