2016-03-04 15:51:00

திருத்தந்தை - இரக்கத்தின் கால்வாய்களாகச் செயல்படுங்கள்


மார்ச்,04,2016. ஒப்புரவு அருளடையாளத்தை நிறைவேற்றுபவர்கள், இரக்கத்தின் கால்வாய்களாக மாறுமாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவையின் பாவமன்னிப்பு உச்ச நீதிமன்றம் நடத்திய ஒரு வாரப் பயிற்சியில் கலந்துகொண்டவர்களிடம் கேட்டுக்கொண்டார்.

இப்பயிற்சியில் கலந்துகொண்ட ஏறக்குறைய 500 இளம் அருள்பணியாளர்கள் மற்றும் குருத்துவ மாணவர்களை, இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒப்புரவு அருளடையாளத்தை நிறைவேற்றுபவர்களுக்கு, தகுந்த மற்றும் காலத்திற்கேற்ற தயாரிப்பு அவசியம் என்று கூறினார்.

ஒப்புரவு அருளடையாளத்தை நிறைவேற்றும் அருள்பணியாளர்கள், அதைப் பெற வருகிறவர்களுக்கு, இறை இரக்கத்தின் கருவிகளாக இருக்கின்றார்கள் என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டுமென்று வலியுறுத்திய திருத்தந்தை, இந்த மீட்புக் கொடைக்குத் தடை வைக்காமல் இருப்பதில் கவனமாய் இருக்குமாறும் கேட்டுக்கொண்டார். ஒப்புரவு அருளடையாளம், இறைவனின் இரக்கத்தை அனுபவிப்பதற்குத் தனிச்சலுகை பெற்ற இடம் மற்றும், இறைத்தந்தையைச் சந்திப்பதைக் கொண்டாடும் விழா என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஒப்புரவு அருளடையாளத்தை நிறைவேற்றும் அருள்பணியாளரும், எப்போதும் மன்னிப்பைப் பெறும் தேவையில் இருப்பவர், அவரும் ஒரு பாவி என்பதால், இதனைப் பெற வருகின்ற ஒவ்வொரு விசுவாசியும் இறை இரக்கத்தை அனுபவிப்பதற்கு உதவ வேண்டும் என்ற தாழ்மையான மற்றும் மனத்தாராளமிக்க விசுவாசத்துடன் தன்னைத் தயார் செய்து கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

அருள்பணியாளரிடம் தன் பாவங்களை அறிக்கையிட்ட பின்னர், இறை இரக்கத்தால் தன் பாவங்கள் கழுவப்பட்டுவிட்டன என்று மனம்வருந்தும் ஒவ்வொரு விசுவாசியும் உறுதியாய் இருக்கிறார், எனவே பாவத்திற்கு வழங்கப்படும் பிராயச்சித்தம், ஒருவகையில் இதயத்தின் யூபிலியாக உள்ளது, ஒப்புரவு அருளடையாளத்தை நிறைவேற்றும் அருள்பணியாளர் மகிழ்வின் வாய்க்காலாக உள்ளார் என்றும் கூறினார் திருத்தந்தை.

தனிமனிதக் கோட்பாடுகளால் பல்வேறு சோதனைகளுக்கு உட்பட்டுள்ள இன்றைய உலகில், இறை இரக்கத்தைத் தேடும் மக்களுக்கு, ஆதரவாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒப்புரவு அருளடையாளத்தில் ஒவ்வொருவரிலும் தூய ஆவியார் செயல்படுகிறார் என்றும் கூறினார்.

கிறிஸ்தவ விசுவாசத்தின் பேருண்மை, இறை இரக்கம் என்று சொல்லில் அடங்கியுள்ளது என்றும், இறை இரக்கத்தை இறைஞ்சும் எல்லாருக்கும் அது இலவசமாக வழங்கப்படுகிறது என்றும் கூறிய திருத்தந்தை, நேர்மையான மனச்சாட்சி, இதயத்தை மாற்றும் இறைவார்த்தை வாசிப்பு, இரக்கப் பண்புடைய சகோதர சகோதரிகள், மன்னிப்பையும் இரக்கத்தையும் அனுபவித்த பாவத்தால் காயம்பட்ட வாழ்வு அனுபவம் என, பல வழிகளில் இறை இரக்கம் ஒவ்வொரு மனிதரையும் சென்றடைகின்றது என்றும் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.