2016-03-04 16:02:00

'Click to Pray' என்ற செயலி ஆரம்பம்


மார்ச்,04,2016. “உங்கள் இதயங்களை இரக்கத்திற்குத் திறந்து விடுங்கள்! இறை இரக்கம், மனிதரின் பாவங்களைவிட சக்தி வாய்ந்தது” என்பது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியாக, இவ்வெள்ளியன்று வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஒவ்வொரு மாதச் செபக் கருத்துக்களுக்காக எல்லாரும் செபிப்பதற்கென, இந்த இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில், புதிய செயலி (App) ஒன்று இவ்வெள்ளியன்று தொடங்கப்பட்டுள்ளது.

'Click to Pray' என்ற செயலி வழியே ஆரம்பிக்கப்பட்டுள்ள, வலைத்தள அமைப்பைப் பயன்படுத்தி, திருத்தந்தையின் செபக் கருத்துக்களுக்காக, உலகினர் அனைவரும் செபிப்பதற்கு வழி செய்யப்பட்டுள்ளது.

இந்தச் செயலியைப் பயன்படுத்துபவர்கள், தனக்காகப் பிறர் செபிப்பதற்குக் கேட்கலாம், பிறரின் கருத்துக்களுக்காகச் செபிக்கலாம், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஒவ்வொரு மாதச் செபக் கருத்துக்கள் பற்றியும் அறியலாம் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

இந்தச் செயலி வழிமுறை, 2014ம் ஆண்டு நவம்பரில் போர்த்துக்கல் நாட்டில் திருத்தூதுச் செப அமைப்பால் தொடங்கப்பட்டது.  போர்த்துக்கல் நாட்டில் மட்டும், 'Click to Pray' என்ற செயலியில், எண்பதாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் பதிவு செய்துள்ளனர். 

இவ்வெள்ளி மாலை திருத்தந்தை தொடங்கி வைக்கும், “ஆண்டவரோடு 24 மணி நேரங்கள்” என்ற ஒப்புரவு அருளடையாள வழிபாட்டையொட்டி, 'Click to Pray' என்ற செயலி வழி செபம் தொடங்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.