2016-03-03 15:39:00

பொதுநிலையினர், சமுதாயத்தில் ஆர்வமாகச் செயலாற்ற அழைப்பு


மார்ச்,03,2016. சமுதாயச் சிந்தனைகளை உள்ளடக்கி, கத்தோலிக்கத் திருஅவை வழங்கியுள்ள படிப்பினைகளின் அடிப்படையில், பொதுநிலையினர் உலகச் சமுதாயத்தில் ஆர்வமாகச் செயலாற்றவேண்டும் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

மார்ச் 1ம் தேதி திங்கள் முதல், 4ம் தேதி வெள்ளி முடிய, உரோம் நகரில் நடைபெறும் இலத்தீன் அமெரிக்க திருப்பீட அவையின் நிறையமர்வுக் கூட்டத்தில், இவ்வவையின் தலைவர், கர்தினால் Marc Ouellet அவர்கள் உரையாற்றியபோது இவ்வாறு கூறினார்.

"சமுதாய வாழ்வில் பொதுநிலையினரின் அர்ப்பணிப்பு" என்ற தலைப்பில் நடைபெறும் இக்கருத்தரங்கை துவக்கிவைத்து உரையாற்றிய கர்தினால் Ouellet அவர்கள், இலத்தீன் அமெரிக்க நாடுகளின் அரசியல் வாழ்வில் பொது நிலையினரின் பங்கு வளரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டைச் சிறப்பிக்கும் வேளையில், இரக்கத்தின் ஓர் இன்றியமையாத அம்சமான நீதியை, அனைத்துத் துறைகளிலும் உறுதி செய்வது, பொது நிலையினருக்கு உள்ள அழைப்பு என்று கூறினார் கர்தினால் Ouellet.

உடல் ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும், இரக்கத்தின் செயல்களை மேற்கொள்வதும், சந்திப்பு கலாச்சாரத்தை வளர்ப்பதும், மன்னிப்பின் வழியே மனக் காயங்களைக் குணமாக்குவதும் இந்த யூபிலி ஆண்டின் சிறப்பானத் தேவைகள் என்று கர்தினால் Ouellet அவர்கள் தன் உரையில் வலியுறுத்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி 








All the contents on this site are copyrighted ©.