2016-03-03 15:17:00

புற்றுநோயை கண்டுபிடிப்பதற்கான செயலி (App) அறிமுகம்


மார்ச்,03,2016. புற்றுநோய்க்குரிய அறிகுறிகளைக் கண்டறிய, மருத்துவர்களுக்கு உதவும் செயலி (App) ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

புற்றுநோய் உள்ளதாக சந்தேகிக்கப்படும் நோயாளிகளிடமிருந்து குறிப்புக்களை பெற்றுக் கொள்வதற்கும், அறிகுறிகள் மற்றும் தடயங்களை நலத்துறை அதிகாரிகள் இனம் கண்டு கொள்ளவும், இந்த செயலி வழி ஏற்படுத்திக் கொடுப்பதாக உள்ளது.

இந்த செயலியை, ஆப்பிள் மற்றும் கூகுள் ஸ்டோர்களில் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு ஸ்காட்லாந்து பல்கலைக் கழகத்தில் அமைந்துள்ள தொழில்நுட்பத்திற்கான ஸ்காட்டிஷ் மையத்தினால் உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலி, ஸ்காட்லாந்து அரசாங்கத்தின் முயற்சியினால் உருவாக்கப்பட்டுள்ளது.

புற்றுநோய் எவ்வளவு விரைவாக கண்டுபிடிக்கப்பட்டு, அதற்கான சிகிச்சை வழங்கப்படுகிறதோ, அவ்வளவு விரைவாக நோயாளியை காப்பாற்றமுடியும் என தெரிவிக்கும் நலத்துறை அதிகாரிகள், புற்றுநோயினால் ஏற்படும் அகால மரணங்களை குறைக்கவும் முடியும் எனத் தெரிவித்துள்ளனர்.

இவற்றை கருத்தில் கொண்டு, இந்த செயலியை அனைத்து நலத்துறை அதிகாரிகளும் தரவிறக்கம் செய்து பயன்படுத்துமாறு, ஸ்காட்லாந்தின் நலத்துறை அமைசசர் ஷோனா ராபின்சான் (Shona Robison) அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆதாரம் : பிபிசி / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.