2016-03-03 15:44:00

பாகிஸ்தான்-ஷபாஸ் பாட்டி அவர்கள் மரணத்தின் 5ம் ஆண்டு நிறைவு


மார்ச்,03,2016. பாகிஸ்தானில் கொலையுண்ட ஷபாஸ் பாட்டி (Shahbaz Bhatti) அவர்களை ஒரு மறைசாட்சி என்று அறிவிப்பது, அந்நாட்டின் கிறிஸ்தவர்களுக்கு பெரும் உந்து சக்தியாக இருக்கும் என்று, மரணமடைந்த ஷபாஸ் பாட்டியின் சகோதரர் பால் பாட்டி அவர்கள் கூறினார்.

2011ம் ஆண்டு, மார்ச் 2ம் தேதி, இஸ்லாமிய தீவிரவாத கும்பலால், சுடப்பட்டு உயிர் துறந்த ஷபாஸ் பாட்டி அவர்கள் மரணத்தின் ஐந்தாம் ஆண்டு நினைவை, இப்புதனன்று, பாகிஸ்தானில் கடைபிடித்த வேளையில், பால் பாட்டி அவர்கள் இவ்வாறு கூறினார்.

மதச் சிறுபான்மையினர் நலன் அரசுத் துறை அமைச்சராகப் பணியாற்றி வந்த ஷபாஸ் பாட்டி அவர்கள், தேவநிந்தனை என்ற பெயரில் தவறாக சிறைப்படுத்தப்பட்ட ஆசியா பிபி என்ற பெண்மணியின் விடுதலைக்காகப் போராடிவந்த வேளையில், தீவிரவாதிகளால் கொல்லப்பட்டார்.

அவர் கொல்லப்பட்ட நாளின் ஐந்தாம் ஆண்டு நினைவை, பல்வேறு ஆலயங்களில் திருப்பலி, மற்றும் செப வழிபாடுகளுடன் கிறிஸ்தவர்கள் கொண்டாடினர் என்று ஆசிய செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

இந்த ஆண்டு நிறைவையொட்டி, அவரது மரணம் ஒரு சாட்சிய மரணம் என்பதை நிலைநாட்ட பாகிஸ்தான் தலத்திருஅவை முயற்சிகளைத் துவங்கியுள்ளது என்று ஆசிய செய்தி மேலும் கூறுகிறது.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.