2016-03-03 15:14:00

திறந்ததோர் இதயமே இறை இரக்கத்தைப் பெறமுடியும் - திருத்தந்தை


மார்ச்,03,2016. இதயம் திறந்திருந்தால் மட்டுமே, இறைவனின் இரக்கத்தைப் பெறமுடியும் என்ற கருத்தை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், இவ்வியாழன் காலை ஆற்றிய மறையுரையின் மையப்பொருளாகக் கூறினார்.

இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், பிடிவாதக் குணம் கொண்டு பின்வாங்கிச் செல்லும் இஸ்ரயேல் மக்களைப் பற்றி இறைவன் கூறும் வார்த்தைகளை, தன் மறையுரையில் சிறப்பாகக் குறிப்பிட்டுப் பேசினார் திருத்தந்தை.

இறைவனுக்குச் செவிசாய்க்காமல் இதயங்களை மூடிக் கொள்பவர்களிடம் இறைவனின் இரக்கம் நுழைவதற்கு வாய்ப்பில்லை என்றும், இதயங்களைக் கடினமாக்கும்போது ஒரு நல்ல தந்தையைப் போல் அவர் நம் இதயங்களைத் திறக்கச் சொல்லி கேட்கிறார் என்றும் திருத்தந்தை கூறினார்.

உங்கள் இதயங்களைக் கடினப்படுத்திக் கொள்ளாமல், ஆண்டவரின் குரலுக்குச் செவி சாயுங்கள் என்று பதிலுரைப் பாடலில் கூறிய வார்த்தைகளையும் திருத்தந்தை தன் மறையுரையில் சிறப்பாகக் குறிப்பிட்டார்.

இயேசு செய்த அற்புதங்களைப் பார்த்தபிறகும், அதற்கு தவறான அர்த்தங்கள் கற்பிக்கும் மக்கள், அவரது அருளைப் பெறுவதற்குப் பதில், அவரைக் கண்டனம் செய்வதிலேயே குறியாய் இருந்தனர் என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.

என்னோடு இராதவர் எனக்கு எதிராக இருக்கிறார் என்று இயேசு இன்றைய நற்செய்தியில் கூறிய வார்த்தைகளைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, எப்பக்கமும் இராமல், நடுவில் இருப்பதும், உலகிற்கும், இறைவனுக்கும் நடுவே சமரச நிலையில் வாழ்வதும் இயலாது என்பதை, தன் மறையுரையில் தெளிவுபடுத்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி 








All the contents on this site are copyrighted ©.