2016-03-02 16:41:00

மேற்கு ஆப்ரிக்காவைச் சூழ்ந்துள்ள பிரச்சனைகள் - ஆயர்கள் கவலை


மார்ச்,02,2016. பாதுக்காப்பின்மை, தீவிரவாதம், கிறிஸ்தவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள், ஊழல், ஆகியவை, மேற்கு ஆப்ரிக்க நாடுகளைச் சூழ்ந்துள்ள பிரச்சனைகள் என்று மேற்கு ஆப்ரிக்க ஆயர் பேரவை வெளியிட்டுள்ள ஓர் அறிக்கை கூறுகிறது.

கானா நாட்டின் தலைநகர் Accraவில் மேற்கு ஆப்ரிக்க ஆயர் பேரவை மேற்கொண்ட ஒருவாரக் கூட்டம், இத்திங்களன்று முடிவுற்றதைத் தொடர்ந்து, அப்பேரவை, Fides செய்திக்கு அளித்த அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

நைஜீரியா, மாலி, புர்கினா பாஸோ, காமரூன் மற்றும் சாட் ஆகிய நாடுகளில் கிறிஸ்தவர்கள் அனுபவித்துவரும் கொடுமைகள் குறித்து, ஆயர்கள் கவலையை வெளியிட்டுள்ளனர்.

மதங்களை வர்த்தக ரீதியாகப் பயன்படுத்துவதைத் தடுக்கவும், மதங்களுக்கிடையே உரையாடலை வளர்க்கவும் ஆயர்கள் முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும் என்று இவ்வறிக்கையில் அழைப்பு விடப்பட்டுள்ளது.

நாடுகளின் முன்னேற்றத்திற்கு தகுதியான முயற்சிகளை உடனடியாக மேற்கொள்ளத் தவறினால், இளையோர் நம்பிக்கை இழந்து தவறானப் பாதைகளைத் தேர்ந்தெடுக்க வழிவகுத்துவிடும் என்று ஆயர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். 

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.