2016-03-01 15:32:00

வன்முறைச் சூழலில் அன்பைப் பரப்புவதே கிறிஸ்தவர்களின் பணி


மார்ச்,01,2016. பாகிஸ்தான் கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு நாளும் எண்ணற்ற சவால்களைச் சந்திக்கும்வேளை, நாட்டில் வன்முறை இடம்பெறும் இடங்களில், கிறிஸ்தவர்கள் அமைதி மற்றும் அன்புக்குச் சாட்சிகளாக வாழ வேண்டுமென்றே திருஅவை வலியுறுத்தி வருகின்றது என்று கூறினார் அந்நாட்டுப் பேராயர் ஜோசப் கூட்ஸ்.

பாகிஸ்தானில், தெய்வநிந்தனை சட்டம் மற்றும் இச்சட்டத்தின்கீழ் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள, குற்றமற்ற தாயான ஆசிய பீபி பற்றி பல கிறிஸ்தவர்கள் அறிந்திருக்கிறார்கள், ஆயினும், கிறிஸ்துவின் அன்பு, வாழ்வில் நம்பிக்கையை இழந்துவிடாமல் இருப்பதற்கு கிறிஸ்தவர்களுக்கு உதவுகின்றது என்று கூறினார் கராச்சி பேராயர் ஜோசப் கூட்ஸ்.

2011ம் ஆண்டு மார்ச் 2ம் தேதி, பாகிஸ்தான் பாராளுமன்ற உறுப்பினர் ஷபாஸ் பாட்டி கொல்லப்பட்டதன் ஐந்தாம் ஆண்டு, இப்புதனன்று நினைவுகூரப்படும்வேளை, இந்த நினைவு நாளை உரோமையில் வருகிற வெள்ளிக்கிழமையன்று சிறப்பிக்கவிருப்பதாகத் தெரிவித்தார் பேராயர் கூட்ஸ்.

இதற்கிடையே, பாகிஸ்தானில் தெய்வநிந்தனை சட்டத்தை எதிர்த்த மாநில ஆளுநர் சல்மான் தஸீர் என்பவரைக் கொலை செய்த மும்தாஸ் கத்ரி என்பவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. மும்தாஸ் கத்ரி, பஞ்சாப் மாநில ஆளுநரான சல்மான் தஸீர் என்பவரை 2011ம் ஆண்டு இஸ்லாமாபாத்தில் சுட்டுக் கொன்றார்.  

ஆதாரம் : Fides /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.