2016-03-01 14:55:00

9வது அரியவகை நோய்கள் தினம், திருப்பீடம் செய்தி


மார்ச்,01,2016. அரியவகை நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், திருஅவை அவர்களைக் கைவிடவில்லை என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

பிப்ரவரி 29, இத்திங்களன்று கடைப்பிடிக்கப்பட்ட, ஒன்பதாவது அரியவகை நோய்கள் தினத்திற்கு, “அரியவகை நோய்கள் பற்றி அறிவிப்பதற்கு எங்களோடு இணையுங்கள்” என்ற தலைப்பில் செய்தி வெளியிட்ட, திருப்பீட நலவாழ்வுத் துறைத் தலைவர் பேராயர் Zygmunt Zimowski அவர்கள், அரியவகை நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மீது திருஅவை மிகுந்த அக்கறை காட்டுகின்றது என்று கூறினார்.

இத்தகைய நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு உதவுவதற்கென எடுக்கப்பட்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளை, பல ஆண்டுகளாக கவனித்து வரும் திருப்பீட நலவாழ்வுத் துறை, இந்நோயுற்றோர் மற்றும் அவர்கள் குடும்பங்களின் குரல்கள், பல்வேறு பொது, அறிவியல் மற்றும் மேய்ப்புப்பணி நிறுவனங்களால் புறக்கணிக்கப்படக் கூடாது என்று கேட்டுகொண்டார் பேராயர் Zimowski.

வருகிற நவம்பர் 10ம் தேதி முதல் 12ம் தேதி வரை, திருப்பீட நலவாழ்வுத் துறை வத்திக்கானில் நடத்தவுள்ள பன்னாட்டு கருத்தரங்கில், அரியவகை நோய்கள் குறித்து கவனம் செலுத்தப்படும் என்றும் தனது செய்தியில் கூறியுள்ளார் பேராயர் Zimowski.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.